செய்திகள்

தேர்தலில் என்ன முடிவு எடுப்பது: ஆன்மீக குருவின் உத்தரவுக்காக காத்திருக்கும் ரங்கசாமி

Published On 2016-04-06 10:34 IST   |   Update On 2016-04-06 10:35:00 IST
ரங்கசாமி இதுவரை யாருடன் கூட்டணி, யார் வேட்பாளர்? என முடிவு எடுக்காமல் மவுனமாக இருந்து வருகிறார். இரு சாமியார்கள் உத்தரவு வந்ததும் அவர் கூட்டணி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி:

புதுவை முதல்–அமைச்சர் ரங்கசாமி கடந்த சட்டசபை தேர்தலுக்கு 2 மாதத்துக்கு முன்பாக என்.ஆர். காங்கிரஸ் கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்தார்.

இவர் அரசியலுக்கு வந்து முதன் முதலில் தேர்தலில் நின்றபோது தோல்வி அடைந்தார். அதற்கு அடுத்த தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைத்தது.

இந்த வெற்றிக்கு அவரது ஆன்மீக குருவான சேலம் அப்பா பைத்தியம் சாமியின் ஆசிதான் என்று அவர் கருதினார். அப்போது அப்பா பைத்தியசாமி உயிரோடு இருந்தார். அவர் புதுவைக்கு அடிக்கடி வருவது உண்டு. அவரை ரங்கசாமி சந்தித்து ஆசி பெறுவது வழக்கம்.

தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பாக அப்பா பைத்தியசாமி ரங்கசாமிக்கு ஆசி வழங்கி நீ வெற்றி பெறுவாய் என்று கூறினார். இதன் மூலம் தான் வெற்றி கிடைத்ததாக ரங்கசாமி கருதினார்.

பின்னர் அப்பா பைத்தியசாமி இறந்து விட்டார். அவருடைய சமாதி கோவில் சேலம் ரெயில் நிலையம் அருகே உள்ளது. அவர் இறந்த பிறகும் சமாதிக்கு சென்று ஆசி பெற்றுவிட்டே எந்த காரியத்தையும் தொடங்குவதை ரங்கசாமி வழக்கமாக கொண்டுள்ளார்.

அப்பா பைத்தியசாமியின் ஆன்மீக குரு அழுக்கு சாமியார் சமாதி கோவில் பொள்ளாச்சி அருகே உள்ள வேட்டைக்காரன் புதூரில் உள்ளது. இந்த கோவிலுக்கும் ரங்கசாமி அடிக்கடி செல்வார். எந்த ஒரு பெரிய முடிவு எடுப்பதாக இருந்தாலும் இந்த 2 கோவிலுக்கும் சென்று உத்தரவு பெற்றுவிட்டே செய்வது வழக்கம்.

இந்த தேர்தலில் ரங்கசாமி இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. யாருடன் கூட்டணி, யார் வேட்பாளர்? என முடிவு எடுக்காமல் மவுனமாக இருந்து வருகிறார். இது சம்பந்தமாக அவரது கட்சி பிரமுகர் ஒருவர் கூறும்போது, இரு சாமியார்களிடம் இருந்து இதுவரை எந்த உத்தரவும் வரவில்லை. அது வந்ததற்கு பிறகு தான் அவர் அடுத்த கட்ட முடிவை எடுப்பார் என்று கூறினார்கள்.

சில நாட்களுக்கு முன்பு ரங்கசாமி பொள்ளாச்சி அழுக்கு சாமியார் கோவிலுக்கு சென்று வணங்கிவிட்டு வந்தார். அடுத்து சேலம் அப்பாபைத்தியசாமி கோவிலுக்கு செல்ல இருக்கிறார். இரு சாமியார்கள் உத்தரவு வந்ததும் அவர் கூட்டணி குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட அவர் தேய்பிறை காலத்தில் எந்த நல்ல விஷயங்களையும் செய்வதில்லை. நாளை அமாவாசை ஏற்பட்டு வளர்பிறை ஆரம்பிக்கிறது. எனவே நாளை அவர் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு ரங்கசாமி விரும்பினார். இதற்கு ரகசிய பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் கூறப்பட்டது. ஆனால் இறுதி முடிவு எடுப்பதற்கு முன்பே அ.தி.மு.க. அனைத்து தொகுதிகளிலும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டது.

ஆனாலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு ரங்கசாமி தொடர்ந்து ஆர்வமாக உள்ளார். இதற்காக ரகசிய தூது அனுப்பி உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Similar News