செய்திகள்

அதிருப்தி எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் வழக்கு தே.மு.தி.க. எம்.எல்.ஏ.பார்த்தசாரதி திட்டக்குடி கோர்ட்டில் ஆஜர்

Published On 2016-04-04 16:19 IST   |   Update On 2016-04-04 16:19:00 IST
அதிருப்தி எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பார்த்தசாரதி திட்டக்குடி கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

பெண்ணாடம்:

கடந்த சட்டசபை தேர்தலில் திட்டக்குடி தனித் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் தமிழழகன். இவர் தே.மு.தி.க. அதிருப்தி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

இவர் கடந்த மாதம் பெண்ணாடத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த போது அவருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இது குறித்து அவர் பெண்ணாடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தியதில் தமிழழகன் எம்.எல்.ஏ.வுக்கு கொலை மிரட்டல் விடுத்து பேசியது சென்னை விருகம்பாக்கம் தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பார்த்தசாரதி என்பவரது செல்போனில் இருந்து பேசியது தெரியவந்தது.

இதையடுத்து பார்த்தசாரதி எம்.எல்.ஏ. மீது பெண்ணாடம் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து பார்த்தசாரதி எம்.எல்.ஏ. முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மனு மீது விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட்டு பெண்ணாடம் போலீசில் தினமும் ஆஜராகி கையெழுத்து விட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கியது, அதன்படி பார்த்தசாரதி எம்.எல்.ஏ. பெண்ணாடம் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி தினமும் கையெழுத்திட்டு வந்தார். இதற்கிடையே நிபந்தனை ஜாமீனை தளர்த்த வேண்டும் என்று பார்த்தசாரதி எம்.எல்.ஏ. மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

மனு மீது விசாரணை நடத்திய சென்னை ஐகோர்ட்டு எந்த போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதோ அந்த போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கோர்ட்டில் ஆஜராகி நிபந்தனை ஜாமீனை தளர்த்துமாறு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி பார்த்தசாரதி எம்.எல்.ஏ. இன்று திட்டக்குடி ஒருங்கிணைந்த கோர்ட்டில் ஆஜர் ஆனார்.

Similar News