போதை ஊசியுடன் 2 வாலிபர்கள் கைது
- போதை ஊசிகளையும் மற்றவர்களுக்கு விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது.
- வழக்குப்பதிவு செய்து முகமது பைசல், சதாம் உசேன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூரில் வலி நிவாரண மாத்திரைகளை போதைக்கு பயன்படுத்துவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. மாநகரம் முழுவதும் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் பழனியம்மாள் பள்ளிக்கு எதிரே உள்ள காட்டுப்பகுதியில் 2 பேர் சந்தேகத்துக்கு இடமாக அமர்ந்து இருந்தனர். அங்கு சென்ற தெற்கு போலீசார் 2 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் போதை ஊசி மற்றும் வலி நிவாரண மாத்திரைகள் இருந்தன.
விசாரணையில் அவர்கள் பெரிய தோட்டத்தை சேர்ந்த முகமது பைசல்(வயது 25), முதலி பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சதாம் உசேன்(35) என்பதும், பனியன் நிறுவனத்தில் டெய்லராக வேலை செய்து வரும் இவர்கள், ஆன்லைன் மூலமாக வலி நிவாரண மாத்திரைகளை மொத்தமாக வாங்கி அதில் இருந்து போதை மருந்து தயாரித்து ஊசி மூலம் உடலில் ஏற்றி போதைக்கு பயன்படுத்தியது தெரியவந்தது.
மேலும் போதை ஊசிகளையும் மற்றவர்களுக்கு விற்பனை செய்ததும் கண்டறியப்பட்டது. அவர்களிடம் இருந்து 30 மாத்திரைகள் மற்றும் போதை ஊசிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து முகமது பைசல், சதாம் உசேன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் போதை ஊசி வாங்கியவர்களின் விவரங்களை பெற்று, போலீசார் ரகசியமாக விசாரித்து வருகிறார்கள்.