காரைக்கால் அருகே தீ விபத்தில் 2 வீடுகள் எரிந்து நாசம்
- வீட்டில் யாரும் இல்லாததால் தீயை அணைக்க முடியவில்லை.
- தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் திருநள்ளாறு அருகே தென்னங்குடி எல்ஜி.ஆர் காலனியில் கஸ்பர் என்பவர் வீட்டில் தீ பிடித்தது. வீட்டில் யாரும் இல்லாததால் தீயை அணைக்க முடியவில்லை. உடனடியாக அருகில் இருந்தோர் சுரக்குடி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு அதிகாரி அசோக் குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை போராடி அணைத்தனர். அதற்குள் பக்கத்து வீட்டில் வசிக்கும் அற்புதராஜ் வீட்டின் ஒரு பகுதி எரிந்தது. அப்பகுதியில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளது.
தீயணைப்பு வீரர்களின் விரைவான செயல்பாட்டால் மற்ற வீடுகள் காப்பாற்றப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இது குறித்து திருநள்ளாறு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தீ விபத்தில் கஸ்பர் வீட்டில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களும், அற்புதராஜ் வீட்டில் சுமார் 30,000 மதிப்பிலான கீற்று மற்றும் மூங்கில் பொருட்கள் எரிந்து சாம்பலானதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.