கோவையில் தனியார் நிறுவன ஊழியர் வீடு உள்பட 2 வீடுகளில் 16½ பவுன் நகை கொள்ளை
- கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்றபோது சம்பவம்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை
கோவை,
கோவை கிணத்துக்கடவு நம்பர் 10 முத்தூரை சேர்ந்தவர் மனோகரன். தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு காயத்ரி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
காயத்ரி மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டனர்.
மாலையில் வீட்டிற்கு வந்து பார்த்த போது வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, வீட்டில் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் செயின், அரை பவுன் மோதிரம், அரை பவுன் வெள்ளி கொலுசு, 6 கிராம் தங்ககாசு, ரூ.1200 ரொக்க பணம் மாயமாகி இருந்தது.
இவர்கள் வேலைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், அதன்பின்னர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து நகை, பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து மனோகரன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி ஜோதி நகரை சேர்ந்தவர் வேதாச்சலம். இவரது மனைவி கிருஷ்ணவேணி(வயது67). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். 2 பேருக்கும் திருமணம் முடிந்து விட்டது. மகன் ஆஸ்திரேலியாவில் வேலை பார்த்து வருகிறார். மகளின் கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருவதால், இவர் தனது தாய், தந்தையுடன் இங்கு வசித்து வருகிறார்.
இந்த நிலையில் இவர்கள் வசித்து வரும் பகுதியிலேயே வேதாச்சலத்தின் மகன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இந்த பணியை வேதாச்சல மும், அவரது மனைவியும் கவனித்து வருகின்றனர்.
நேற்று 2 பேரும் வழக்கம் போல பணி நடைபெறும் வீட்டிற்கு சென்று அங்கு வேலைகளை கவனித்து கொண்டிருந்தனர்.
அப்போது இவர்களது மகன் போன் செய்து, வீடு திறந்து கிடப்பதாக தெரிவிக்கவே அதிர்ச்சியாகி 2 பேரும் வீட்டிற்கு வந்து பார்த்தனர்.
அப்போது வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த செயின், மோதிரம் உள்பட 12 அரை பவுன் நகை மாயமாகி இருந்தது.
இதுகுறித்து கிருஷ்ணவேணி பொள்ளாச்சி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தேகத்தின் பேரில் அவர்களது வீட்டின் அருகே வசித்து வரும் பெண்ணை பிடித்து விசாரித்து வருகின்றனர்.