கேளம்பாக்கம் அருகே ஆவணம் இன்றி தங்கி இருந்த 16 வங்கதேச வாலிபர்கள்
- கேளம்பாக்கம் அருகே படூர் கிராமத்தில் சாலையோரத்தில் ஏராளமான வடமாநில வாலிபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
- எப்படி தமிழகத்திற்கு வந்தனர்? அவர்களை இங்கு அழைத்து வந்தது யார்? என்ன வேலை செய்து வந்தனர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
திருப்போரூர்:
கேளம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் ஜி20 மாநாடு நடைபெற திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.
இதையடுத்து கேளம்பாக்கம், தாழம்பூர், கானத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தங்கி உள்ள வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குறித்து கடந்த சில நாட்களாக போலீசார் தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில் கேளம்பாக்கம் அருகே படூர் கிராமத்தில் சாலையோரத்தில் ஏராளமான வடமாநில வாலிபர்கள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த 16 வாலிபர்களை பிடித்தனர். அவர்களிடம் விசாரித்தபோது இந்தி மற்றும் உருதுமொழி மட்டும் பேசினர். அவர்கள் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. அவர்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை.
இதையடுத்து அவர்கள் அனைவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அவர்கள் எப்படி தமிழகத்திற்கு வந்தனர்? அவர்களை இங்கு அழைத்து வந்தது யார்? என்ன வேலை செய்து வந்தனர்? என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
இது குறித்து உருது தெரிந்த போலீசார் மூலம் தீவிரமாக ரகசிய விசாரணை நடத்தி வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.