உள்ளூர் செய்திகள்

நீலகிரி மாவட்டத்தில் 1500 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட்-கலெக்டர் அம்ரித் வழங்கினார்

Published On 2023-07-13 14:45 IST   |   Update On 2023-07-13 14:45:00 IST
  • தினசரி 60 கிராம் வீதம் 4 பிஸ்கெட்டுகள் சாப்பிட வேண்டும்.
  • தமிழக அரசுக்கு கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

ஊட்டி,

தமிழகத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் மற்றும் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆரம்பகால குழந்தை பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

இதன்ஒருபகுதியாக 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சியை உறுதிசெய்யும்வகையில், தமிழக அரசு ஊட்டச்சத்தை உறுதிசெய் என்ற திட்டத்தை அமலுக்கு கொண்டு வந்து உள்ளது. அதன்படி ஊட்டச்சத்து குறைபாடுகள் உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நீலகிரியில் மாவட்ட கலெக்டர் அம்ரித் தமிழக அரசின் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை தொடங்கி வைத்து உள்ளார்.

இதன் மூலம் மாவட்ட அளவில் 1517 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பிஸ்கெட் வழங்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அதிகாரிகள் கூறுகையில், ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகமுள்ள குழந்தைகளுக்கு தலா 750 கிராம் வீதம், மாதம் 2 பாக்கெட் பிஸ்கெட்டுகள் வழங்கப்படும்.

இதனை அவர்கள் தினசரி 60 கிராம் வீதம் 4 பிஸ்கெட்டுகள் சாப்பிட வேண்டும். சிறிய அளவில் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள், தினமும் 30 கிராம் வீதம் 2 பிஸ்கெட்டுகள் சாப்பிட்டு வரவேண்டும். இதன்மூலம் குழந்தைகளின் எடை, உயரம் மற்றும் உடல்நலம் ஆகியவை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட உள்ளது எனறு தெரிவித்து உள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தை நடைமுறைப்படுத்தி, வளரிளம்பருவத்தினரின் உடல்நலனில் அக்கறை செலுத்தி வரும் தமிழக அரசுக்கு கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News