முத்துப்பேட்டை அலையாத்திக்காட்டில் குவியும் வெளிநாட்டு பறவைகள் - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
- காவிரி ஆற்றுப்படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக்காடு அழகுற அமைந்துள்ளது.
- குட்டி குட்டியாக தீவுகள் போல் காணப்படும் மணல்பாங்கான இடத்தில் வெளிநாட்டு பறவைகளையும் ரசிக்கலாம்.
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காடு ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரிய பரப்பளவு கொண்ட காடுகளில் ஒன்றாகும். இந்த காடு சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து கடலோர கிராமங்களை பாதுகாக்கும் இயற்கை அரணாக விளங்குகிறது. மேலும் கடலோரங்களில் எற்படும் மண் அரிப்பை பெருமளவில் தடுத்து நிறுத்துகிறது.
முத்துப்பேட்டை பகுதியில் 12 ஆயிரத்து 20 எக்டேர் பரப்பளவில் அலையாத்திக்காடு காணப்படுகிறது. திருவாரூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களிலும் இந்த காடு பரவி உள்ளது.
காவிரி ஆற்றுப்படுகையின் தென்கோடியில் முத்துப்பேட்டை சதுப்பு நில அலையாத்திக்காடு அழகுற அமைந்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் அதிராம்பட்டினத்தின் மேற்கு பகுதியில் தொடங்கி நாகை மாவட்டத்தின் கோடியக்கரை கிழக்கு பகுதி வரை இந்த அலையாத்திக்காடு நீண்டுள்ளது.
முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அலையாத்திக்காட்டுக்குள் சுற்றுலாப் பயணிகள் சென்று பார்வையிடலாம். அதற்கேற்ற வகையில் மரப்பலகையால் நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.
காடுகளை உயரே இருந்து பார்க்க வசதியாக உயர் கோபுரங்கள், ஓய்வெடுக்க குடில்கள் என இயற்கையை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற வசதிகள் இங்கு உள்ளன. வனத்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
அலையாத்திக்காட்டுக்குள் செல்லும் ஆற்றின் வழியே படகில் நெடுந்தூரம் பயணம் செய்வது சுற்றுலாப் பயணிகளுக்கு புதுவிதமான அனுபவத்தை தரும்.
குட்டி குட்டியாக தீவுகள் போல் காணப்படும் மணல்பாங்கான இடத்தில் வெளிநாட்டு பறவைகளையும் ரசிக்கலாம். இந்த அலையாத்திக்காட்டை சர்வதேச தரத்துக்கு உயர்த்த முற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. படகுதுறை பகுதியில் சுற்றுலாப் பயணிகள் காத்திருக்கும் பகுதியில் பிரமாண்டமான மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு பல்வேறு நாடுகளில் இருந்து பல்வேறு வகையான பறவைகள் வருகை தருகின்றன. இங்கு இனப்பெருக்கம் செய்வதை அந்த பறவைகள் வழக்கமாக கொண்டுள்ளன. அதற்கேற்ற சூழல் இங்கு நிலவுவதாக பறவை ஆர்வலர்கள் கூறுகிறார்கள். தற்போது கடந்த சில வாரங்களாக வெளிநாட்டு பறவைகள் வரத்து அதிகமாக உள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.