இந்த ஆண்டாவது தீர்ப்பு கிடைக்குமா? - எதிர்பார்ப்பில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினர்
- எங்கள் தந்தை மற்றும் சகோதரர் இறந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
- இந்த வழக்கில் கைதானவர்கள் சுதந்திரமாக அவர்களின் குடும்பத்தினரை சந்திக்கின்றனர்.
மதுரை:
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோரை கடந்த 2020-ம் ஆண்டில் போலீசார் விசாரணைக்கு அழைத்துச்சென்று தாக்கியதில் படுகாயம் அடைந்து அடுத்தடுத்து இறந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.
இதில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் உள்பட 9 போலீசார் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சி.பி.ஐ. விசாரணை அதிகாரியிடம் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர். இந்த வழக்கு நேற்று நீதிபதி முத்துக்குமரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் ஆஜராகி இருந்தனர். அவர்களிடம் நீதிபதி பல்வேறு கேள்விகளை எழுப்பினார். ஆனால் அதற்கு அவர்கள், தாங்கள் எந்த குற்றச்சம்பவத்திலும் ஈடுபடவில்லை என்று மறுப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து இந்த வழக்கை இன்றைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு விசாரணையை காண்பதற்காக இறந்த ஜெயராஜின் மகள்கள் மற்றும் குடும்பத்தினர் நேற்று கோர்ட்டுக்கு வந்திருந்தனர்.
வழக்கு விசாரணை முடிந்த பின்பு ஜெயராஜின் மகள் பெர்சிஸ், கலெக்டர் அலுவலக வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
எங்கள் தந்தை மற்றும் சகோதரர் இறந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக மதுரையில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வருடமாவது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
சி.பி.ஐ விசாரணை திருப்திகரமாக இருந்தது. இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் திடீரென அப்ரூவராக மாற விரும்புவதாக கூறியது உள்ளிட்ட சில காரணங்களால் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக கருதுகிறோம். போலீசார் எங்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் இந்த வழக்கில் கைதானவர்கள் சுதந்திரமாக அவர்களின் குடும்பத்தினரை சந்திக்கின்றனர். ஈவு இரக்கமின்றி என் தந்தையையும், தம்பியையும் காவல்துறையினர் தாக்கி இருக்கின்றனர். இதற்கு முழு காரணம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே ஜெயராஜ் பென்னிக்ஸ் இறப்பு சம்பந்தமாக ஆய்வு செய்த சுகாதாரத் துணை இயக்குனரின் அறிக்கையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று சப்-இன்ஸ்பெக்டர் ரகு கணேஷ் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. சி.பி.ஐ. தரப்பில் கால அவகாசம் கோரியதால், அந்த வழக்கை வருகிற 19-ந் தேதிக்கு நீதிபதி ஸ்ரீமதி ஒத்தி வைத்தார்.