உள்ளூர் செய்திகள்

கோவை கோர்ட்டில் இன்று 29 பேருக்கு 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை

Published On 2023-10-05 09:23 GMT   |   Update On 2023-10-05 09:23 GMT
  • வின்ஸ்டார் இந்தியா நிறுவன மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 29 பேரும் இன்று கோர்ட்டில் ஆஜர்.
  • நகல் எடுக்க மட்டும் ரூ.14 லட்சம் செலவு

கோவை.

சேலத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வின்ஸ்டார் இந்தியா மற்றும் சவுபாக்கியா புரமோட்டர்ஸ் என்ற நிறுவனத்தை சேலத்தில் தொடங்கினார். அந்த நிறுவனம் மூலம் குறைந்த முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக கூறினார். மேலும் வீட்டுமனை பட்டாக்களும் குறைந்த விலையில் தருவதாக அறிவிப்பு வெளியிட்டார்.

இதை நம்பி கோவை, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்துக் கும் மேற்பட்டோர் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் நிறுவன உரிமையாளர் சிவக்குமார் மற்றும் நிறுவனத்தில் பணியாற்றக்கூடிய உறுப்பினர்கள், புரோக்கர்கள் என 28 பேர் பணம் கட்டிய பொதுமக்களுக்கு தவணை முடிந்தும் எவ்விதமான பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை.

தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பொதுமக்களில் 1686 பேர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். ரூ.175 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த வழக்கு கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து போலீசார் குற்றப்பத்திரிகை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட 29 பேர் மீது தலா 50 ஆயிரம் பக்கம் கொண்ட 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிக்கை நகல்கள் தயார் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 29 பேரும் இன்று கோவையில் உள்ள கோர்ட்டில் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டு இருந்தது. குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் 50 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை நகல் இன்று வழங்கப்பட்டது.

2 நபர்கள் வராததால் இன்று மாலை 5.30 மணிக்குள் இரண்டு நபர்களும் நேரடியாக நீதிமன்றத்திற்கு வந்து குற்ற நகல்களை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று நீதிபதி செந்தில்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

29 பேருக்கு வழங்க க்கூடிய குற்றப்ப த்திரிக்கை நகல்களுக்கு ஜெராக்ஸ் எடுக்க அரசு 14 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளதாக கூறப்ப ட்டு ள்ளது. ஒரு குற்ற வழக்கிற்காக அரசு அதிகபட்ச தொகையான 14 லட்சம் ரூபாய் செலவு செய்திருப்பது இதுவே முதல்முறை என்று வக்கீல்கள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News