குறைதீர்க்கும் கூட்டத்தில் 139 மனுக்கள் பெறப்பட்டன
- இலவசமாக வீடு கட்டி தர கோரி மனு அளித்தனர்.
- கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளவர்கள் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பதிலாக, இலவசமாக வீடு கட்டி தர கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- நாங்கள் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோம். எங்களது வீடுகள் ஆபத்தான இடத்தில் உள்ளது. எனவே, அரசு எங்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும். தற்போது அல்லஞ்சி, பிரகாசபுரம் பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் மூலம் கட்டப்பட்ட வீடுகள் ஒதுக்கீடு செய்வதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், அதற்கு ரூ.1 லட்சம் முன் பணம் செலுத்த வேண்டும். இந்த தொகையை எங்களால் செலுத்த முடியாத நிலையில் உள்ளோம். எனவே, எங்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டித்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 139 மனுக்கள் பெறப்பட்டது.