உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சியில் விதிகளை மீறி கட்டிய 102 கட்டிடங்கள்- விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Published On 2023-09-17 09:06 GMT   |   Update On 2023-09-17 09:06 GMT
  • விதிமீறல் கட்டிடங்கள் குறித்து வார்டு வாரியாக கணக்கெடுப்பு நடத்த மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார்.
  • உரிமையாளர்கள் உரிய விளக்கம் அளித்து விதிமீறல்களை சரி செய்து, அபராத தொகையுடன் கூடிய கட்டணம் செலுத்தி கட்டிட அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்ட குழும அனுமதி பெறாமல் மாநகரப் பகுதியில் ஏராள மான கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக புகார்கள் வந்தது.

விதிமீறல் கட்டிடங்கள்

இதையடுத்து விதிமீறல் கட்டிடங்கள் குறித்து வார்டு வாரியாக கணக்கெடுப்பு நடத்த மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ண மூர்த்தி உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து உதவிப் பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் 4 மண்டலங்களிலும் வார்டு வாரியாக அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டிடங்கள் குறித்து கணக்கு எடுத்தனர்.

ஆய்வு

இதையடுத்து கடந்த 10 நாட்களாக 481 கட்டிடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. இதில் 26 வணிக வளாகங்கள் மற்றும் 76 வீடுகள் முறை யான அனுமதி இன்றி விதி முறைகளை மீறி கட்டப் பட்டது தெரியவந்தது.

இது குறித்த ஆய்வு அறிக்கையை கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தியிடம் பொறியாளர்கள் சமர்ப்பித்தனர். அதனை தொடர்ந்து முதல் கட்டமாக அனுமதியின்றி விதிமுறை களை மீறி கட்டிய கட்டிடங் களை ஏன் இடித்து அப்புறப் படுத்தக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கமிஷனர் உத்தர விட்டுள்ளார்.

102 கட்டிடங்களுக்கு நோட்டீஸ்

இதையடுத்து நகர ஊரமைப்பு சட்டப்பிரிவு 456-ன் படி 102 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. அதற்கு உரிமையாளர்கள் உரிய விளக்கம் அளித்து விதிமீறல்களை சரி செய்து, அபராத தொகையுடன் கூடிய கட்டணம் செலுத்தி கட்டிட அனுமதி பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறு அனுமதி பெற விண்ணப்பிக்காத கட்டிடங்களை கண்டறிந்து எடுத்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க உள்ளதாக கமிஷனர் தெரிவித்த தாகவும் கூறப்படுகிறது.

Tags:    

Similar News