உள்ளூர் செய்திகள்

சபாநாயகர் அப்பாவு

வள்ளியூரில் 100 ஏக்கரில் தொழில்பேட்டை - சபாநாயகர் அப்பாவு தகவல்

Published On 2022-07-25 09:53 GMT   |   Update On 2022-07-25 09:53 GMT
  • இளைஞர்கள் தொழில் செய்வதற்கு அதிக அளவில் தி.மு.க. அரசு ஊக்குவித்து வருகிறது.
  • வள்ளியூரில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு படித்த வாலிபர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் குறித்தும், புதிய தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு அரசு திட்டங்கள் விரைவாக சென்றடைவதை உறுதி செய்வது குறித்தும் ஆலோசனை கூட்டம் வண்ணார்்பேட்டையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.

சபாநாயகர் பேட்டி

இதில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, மாவட்ட தொழில் மையம் மற்றும் சிட்கோ அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் சபாநாயகர் அப்பாவு நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். இது தவிர உள்ளூரில் உள்ள பெரிய தொழிலதிபர்கள் மூலமாகவும் தமிழ்நாட்டில் பல்வேறு முதலீடுகள் செய்யப்பட்டுள்ளன. இளைஞர்கள் தொழில் செய்வதற்கு அதிக அளவில் தி.மு.க. அரசு ஊக்குவித்து வருகிறது. 12 முதல் 35 வயது வரையிலான இளைஞர்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ. 2 கோடி கடன் வழங்கப்படுகிறது. இதில் 25 சதவீதம் அதாவது ரூ.50 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.

குறு, சிறு, நடுத்தர தொழிலில் இளைஞர்க ளுக்கு வேலை வாய்ப்பை அதிக அளவில் வழங்கு வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது இளைஞர்களுக்கு எப்படி அதிக அளவில் வேலை வாய்ப்பினை வழங்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி உள்ளோம். மேலும் முன்னணி வங்கிகளில் கடன் உதவி எளிதாக கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளோம்.

வள்ளியூரில் பயிற்சி மையம் அமைக்கப்பட்டு படித்த வாலிபர்களுக்கு தொழில் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

வள்ளியூரில் அரசு நிலத்தில் 100 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு அதில் தொழில் பேட்டை அமைக்கப்பட உள்ளது. இங்கு தொழில் நிறுவனங்கள் அமைக்க விரும்பும் ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தலா 50 சென்ட் இடம் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பணிகளை தொடங்கி வைக்க அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோரை அழைக்க உள்ளோம்.

இது தவிர வள்ளியூர், பணகுடி உள்ளிட்ட இடங்களில் வீட்டு வசதி மேம்பாடு மூலமாக வள்ளியூரில் 504 வீடுகளும், பணகுடியில் 468 வீடுகளும் கட்டுவதற்கு அரசாணை சமீபத்தில் வெளியிடப்பட்டது.விரைவில் அதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் தொடங்கும்.

வருகிற 6-ந்தேதி படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் விதமாக வண்ணாரப்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கவும், கிராமப்புற மாணவர்கள் கலந்து கொள்வதற்கு கூடுதல் பஸ் வசதிகள் ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் சுமார் 300 நிறுவனங்கள் கலந்து கொண்டு தேர்வு செய்கிறார்கள். இதன் மூலமாக சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், மாவட்ட கவுன்சிலர் சாலமோன் டேவிட் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News