செய்திகள்
கங்கனா - ரங்கோலி

மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக வழக்கு - நடிகை கங்கனா, சகோதரி நேரில் ஆஜராக போலீஸ் சம்மன்

Published On 2020-11-03 15:56 IST   |   Update On 2020-11-03 15:56:00 IST
மத ஒற்றுமையை சீர்குலைப்பதாக பதியப்பட்ட வழக்கில் நடிகை கங்கனா ரணாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி நேரில் ஆஜராகும் படி மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல உணருவதாகவும், மும்பை போலீசாரை மாபியாக்களுடன் ஒப்பிட்டும் கருத்து தெரிவித்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சையை கிளப்பினார். 

அவரது கருத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்த மகாராஷ்டிர அரசு சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்த கங்கணாவின் மும்பை அலுவலகத்தின் ஒரு பகுதியை இடித்தது. மேலும், கங்கனா மகாராஷ்டிர மாநிலம் வரவும் கடும் கண்டனங்கள் எழுந்தது. ஆனால், கங்கனாவுக்கு இமாச்சலபிரதேச அரசு ‘ஒய் பிளஸ்’ பாதுகாப்பு வழங்கியது.

இதையடுத்து, ’ஒய் பிளஸ்’ பாதுகாப்புடன் இமாச்சலபிரதேசத்தில் இருந்து கங்கனா மீண்டும் மகாராஷ்டிரா வந்தார். அவர் தற்போது தனது சொந்த மாநிலமான இமாச்சலபிரதேசம் வசித்து வருகிறார்.

அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பாலிவுட்டில் உள்ள போதைப்பொருள் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்து வந்தார். மேலும், பிரான்ஸ் நாட்டின் பாரிசில் வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெடி பயங்கரவாதியால் தலைதுண்டிக்கப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டது தொடர்பாகவும் டுவிட்டரில் கருத்து தெரிவித்திருந்தார். கங்கனாவுடன் இணைந்து அவரது சகோதரி ரங்கோலி சந்தலும் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்டு வந்துள்ளார்.

பாரிஸ் ஆசிரியர் சாமுவேல் பெடி கொடூரக்கொலை தொடர்பாக கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சமூகவலைதளத்தில் பதிவு செய்த கருத்துக்கள் அனைத்தும் மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் இருப்பதாக மும்பையில் உள்ள பாந்திரா மாஜிஸ்திரேட் மெட்ரோபொலிட்டன் நீதிமன்றத்தில்  ஷகில் அஷ்ரப் அலி சயத் என்பர் புகார் மனு அளித்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் கங்கனா மற்றும் அவரது சகோதரி மீது வழக்குப்பதிவு செய்ய காவல்த்துறைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, மத ஒற்றுமையை சீர்குலைத்தல் நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய தண்டனை சட்டப்பிரிவு 124 ஏ, 153 ஏ, 295 ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் கங்கனா ரனாவத் மற்றும் அவரது சகோதரி ரங்கோலி சந்தல் ஆகிய 2 பேர் மீதும் பாந்திரா போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலி ஆகிய இருவரும் வரும் 10-ம் தேதிக்குள் விசாரணைக்காக நேரில் ஆஜராக வேண்டும் மும்பை போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

Similar News