செய்திகள்

கேளிக்கை வரிக்கு எதிர்ப்பு: தமிழகத்தில் 1000 திரையரங்குகள் மூடப்பட்டன - சினிமா காட்சிகள் ரத்து

Published On 2017-07-03 10:06 IST   |   Update On 2017-07-03 10:14:00 IST
தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பை கண்டித்து மாநிலம் முழுவதும் 1000 சினிமா திரையரங்குகள் மூடப்பட்டன. அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.
சென்னை: 

சினிமா டிக்கெட்டுக்கு அதிகபட்சமாக 28 சதவீதம் சரக்கு, சேவை வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் சினிமா கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகள் மூலம் சினிமா டிக்கெட்டுக்கு 30 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்க புதிய சட்டம் கொண்டு வந்து இருக்கிறது.

இந்த சட்டம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கேளிக்கை வரி சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 3-ந் தேதி (இன்று) முதல் தியேட்டர்களை மூடுவோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் அறிவித்தனர். இதனால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டது.

தியேட்டர்களை மூடினால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், எனவே போராட்டத்துக்கு ஆதரவு தர முடியாது என்றும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் நடிகர் விஷால் அறிவித்தார். திரையரங்கு உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தினார்.

இருப்பினும் திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று திரையரங்கு உரிமையாளர்களின் அவசர கூட்டத்திற்கு பிறகு  அபிராமி ராமநாதன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

இந்நிலையில், திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்தப்படி தமிழகம் முழுவதும் இன்று 1000 திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன.


Similar News