செய்திகள்

எம்.ஜி.ஆர். போல ரஜினி முதல்வர் ஆவார்: கேரள ஜோதிடர் கணிப்பு

Published On 2017-05-17 16:04 IST   |   Update On 2017-05-17 16:04:00 IST
கேரளாவில் இருக்கும் ஜோதிடர் ஒருவரிடம், ரஜினிக்காக அவரது நண்பர் ஒருவர் ஜாதகம் பார்த்திருக்கிறார். ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நல்ல நேரம் வந்தாச்சு என்று ஜோதிடர் சொல்லியிருக்கிறார்.

ரஜினியின் அரசியல் பின்னணி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுபற்றி அவருக்கு நெருக்க மானவர்கள் கூறியதாவது:-

கேரளாவில் இருக்கும் ஜோதிடர் ஒருவரிடம், ரஜினிக்காக அவரது நண்பர் ஒருவர் ஜாதகம் பார்த்திருக்கிறார். ரஜினி, அரசியல் கட்சி ஆரம்பிக்கும் நல்ல நேரம் வந்தாச்சு.

இனி எந்த நாளில் அவர் அரசியல் கட்சித் தொடங்கினாலும், அவர் நினைத்தது நடக்கும். இன்னொரு எம்.ஜி.ஆர். ஆக தமிழக முதல்வராக வலம் வரக்கூடிய யோகம் அவருக்கு இருக்கிறது என்று அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.

தனிக்கட்சி ஆரம்பித்து விட்டு, அக்கட்சியை, தேசிய கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம். ஒரு கட்டத்தில், பா.ஜ.க.வும் தனக்கு முழு மரியாதை கொடுத்து, தமிழகத்தை ஆள அனுமதிக்கும்பட்சத்தில், புதிய கட்சியை பா.ஜ.க.வோடு இணைத்து விடலாம் என்றும், அந்த ஜோதிடர், நம்பிக்கை வாக்கு கொடுத்துள்ளார்.


ஜோதிடர் சொல்லும் பாதையில் பயணிக்ககும் முடிவு செய்துள்ள ரஜினி இப்படியொரு யோகம் தனக்கு இருக்கிறதா? என, தமிழகத்தில் பிரபலமாக இருக்கும் ஜோதிடர்களிடமும் கருத்து கேட்டு வருகிறார்.

ரஜினிக்கு 1996 முதலே தீவிர அரசியலில் குதிக்க வேண்டும் என ஆசை இருந்தது. எதிலும் ரிஸ்க் எடுக்க விரும்பாத அவர் தன்னை சந்திக்க வருபவர்களிடம் தமிழக அரசியல் முதல் தேசிய அரசியல் வரை, நிறைய பேசுவார். பேச்சின் முடிவில், ஒருவேளை, நான் தீவிர அரசியலில் களம் இறங்குகிறேன் என வைத்துக் கொள்வோம். அந்த சூழல் எப்படி இருக்கும்? உங்களுக்கு தெரிந்ததை முதலில் சொல்லுங்கள். பின், உங்களுக்கு தெரிந்தவர்கள், நெருக்கமானவர்களிடம் கேட்டு, அவர்களின் கருத்துக்களையும் சொல்லுங்கள் என்று, மறக்காமல் கூறுவார்.

ஒருவேளை, அரசியலில் தோற்றுவிட்டால் என்ன செய்வது என்ற கேள்வியையும் அவர் விடாப்பிடியாக கேட்பார்.

நிறைய பேரிடம் கருத்துக்களை மாறி மாறி கேட்பதாலேயே மனதுக்குள் நிறைய குழப்பங்களுக்கு ஆளாகி, ஆசைக்கும் தோல்விக்கும் இடையில் எதை தேர்வு செய்வது என புரியாமல் இருந்து வந்தார். இதே நிலையை வெகு நாட்களுக்கு கொண்டு செல்ல அவர் விரும்பவில்லை. அரசியல் குறித்து விரைவில் நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார்.

பா.ஜ.வுடன், நெருக்கமாக இருந்து, தன்னுடைய அரசியல் ஆர்வம் குறித்து தெரிவித்து வந்தாலும், ஒரு கட்சிக்குள் தன்னை சுருக்கிக் கொள்வதை அவர் விரும்பவில்லை.


தற்போதைய நிலையில், தனி கட்சி ஆரம்பிக்கும் எண்ணத்துக்கு அவர் வந்து விட்டார். அதற்கான டீசர் தான் ரசிகர்கள் சந்திப்பாக நடந்து கொண்டிருக்கிறது. ரஜினி, அரசியலில் குதிப்பது உறுதியாகி விட்டது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Similar News