தங்கத்தை விட, `வெள்ளி' முதலீடு சிறந்ததா..?
- பாதுகாப்பு பிரச்சனை இல்லை, பரிமாற்றங்களுக்கு எளிதானவை, எளிதில் பணமாக மாற்றலாம்.
- தீபாவளி அன்று, லட்சுமி தேவியை வணங்கும் சடங்காக, பொதுவாக மாலை நேரத்தில் பங்குச்சந்தை ஒரு மணிநேரம் திறக்கப்படும்.
நாளுக்கு நாள் தங்கம், வெள்ளியின் விலை ஏற்றம் கண்டு வரும் நிலையில், தங்கத்துடன் சேர்த்து வெள்ளியில் முதலீடு செய்யும் ஆர்வமும் பெருகி விட்டது. அதேசமயம், பங்குச்சந்தையிலும் ஏற்ற இறக்கங்கள் நீடிப்பதால், முதலீட்டாளர்களின் தேர்வு, தங்கம் மற்றும் வெள்ளியாக இருக்கிறது.
இந்நிலையில், தங்கம்-வெள்ளியில் முதலீடு செய்வது நல்லதா?, பங்குச்சந்தை முதலீடு சிறந்ததா..? என்கிற சந்தேகம் எல்லோர் மனதிலும் எழுவதுண்டு. இது தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறார், தர்மஸ்ரீ ராஜேஸ்வரன். பங்குச்சந்தையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்றவரான இவர், 'சாய் ஷேர்ட்யூட்' -டின் நிறுவனர். இவர் தன்னுடைய சமூக ஊடகங்கள் வாயிலாக, முதலீடு சம்பந்தமான பல்வேறு சந்தேகங்களுக்கு பதிலளித்து வருகிறார். அவர், தங்கம் வெள்ளி முதலீடு தொடர்பான சந்தேகங்களுக்கு, விடை கொடுக்கிறார்.
* இன்றைய நிலவரத்தில், தங்கம் வெள்ளி முதலீடு சிறந்ததாக தோன்றுகிறதே, உண்மைதானா?
இவை இரண்டுமே வங்கி சேமிப்புகள் மற்றும் இதர சேமிப்புகளை ஒப்பிடும்போது சிறந்த தேர்வுகள் தான். ஆனாலும் இவற்றில் முதலீடு செய்யும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்.
உலகளவிலான பணவீக்க விகிதம் (Inflation), அரசியல் பதற்றங்கள் (Geopolitical Tensions), அமெரிக்க டாலரின் விலை ஏற்ற இறக்கம் ஆகியவற்றின் பின்னணியில், தங்கம் ஒரு சிறந்த பாதுகாப்பான முதலீடாக (Safe Haven) உள்ளது. அதேசமயம் வெள்ளி ஒரு அதிக ஏற்ற இறக்கமுள்ள (Volatile) உலோகம். இது தொழில்துறை தேவை (சோலார் பேனல், எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி) மற்றும் முதலீட்டுத் தேவை ஆகிய இரண்டையும் சார்ந்துள்ளது. பொருளாதாரம் வலுவாக இருந்தால் வெள்ளி விலை உயரும், ஆனால் மந்த நிலையில் விலை வீழ்ச்சி அதிகம். எனவே, தங்கத்தில் அதிக முதலீடும், வெள்ளியில் சிறு பங்கு முதலீடும் நல்லது.
* பங்குச்சந்தையில் தங்கம், வெள்ளி வாங்க முடியுமா? லாபகரமாக இருக்குமா? எப்படி வாங்குவது? என்னென்ன தேவைப்படும்?
ஆம்! முடியும். டிமாட் மற்றும் டிரேடிங் கணக்கு இருந்தால், நீங்கள் பங்குச்சந்தையிலும் தங்கம், வெள்ளி வாங்கலாம். தங்கம், வெள்ளி இ.டி.எப். வகைகளில், முதலீடு செய்யலாம். உதாரணத்திற்கு நிப்பான் இந்தியா இ.டி.எப்., ஐ.சி.ஐ.சி.ஐ. புரூ சில்வர் இ.டி.எப். போன்றவை, தங்கம்-வெள்ளி சார்ந்த பிரபலமான பங்குச்சந்தை முதலீடுகள். நகைகள், நாணயங்களை விட இவற்றில் கட்டணங்கள் குறைவு. பாதுகாப்பு பிரச்சினை இல்லை, பரிமாற்றங்களுக்கு எளிதானவை, எளிதில் பணமாக மாற்றலாம்.
* தீபாவளிக்கு என பிரத்யேகமாக நடைபெறும், பங்கு வர்த்தகம் பற்றி விளக்குங்கள்?
தீபாவளி அன்று, லட்சுமி தேவியை வணங்கும் சடங்காக, பொதுவாக மாலை நேரத்தில் பங்குச்சந்தை ஒரு மணிநேரம் திறக்கப்படும். இந்த நேரத்தில் வர்த்தகம் செய்வது வருடம் முழுவதும் நல்ல லாபம் மற்றும் செழிப்பைக் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. முகூர்த்த சிறப்பு வர்த்தகத்தில் நீங்கள் நம்பிக்கை வைத்திருக்கும் ஒரு நல்ல நிறுவனத்தின் பங்குகளைச் சிறிய எண்ணிக்கையில் வாங்கலாம். அல்லது, உங்கள் எஸ்.ஐ.பி.-ஐ இந்த நாளில் தொடங்கலாம்.
* பங்குச்சந்தை, நிலையாக இருக்கிறதா? இந்த சமயத்தில் எந்த துறையில் முதலீடு செய்வது நல்லது? எந்தத் துறையைத் தவிர்ப்பது நல்லது?
தற்போதைய பங்குச்சந்தை 'நிலையான ஏற்ற இறக்கம்' (Stable Volatility) கொண்டதாக உள்ளது. உலகப் பொருளாதாரச் சவால்கள் இருப்பினும், இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சி (ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம்) சந்தையைத் தாங்கி நிற்கிறது. பெரும் சரிவு வருவதற்கான வாய்ப்பு தென்படவில்லை. ஆனால் அதி விரைவான வளர்ச்சியையும் எதிர்பார்க்க முடியாது. இந்த சூழலில் வங்கி மற்றும் நிதி சார்ந்த பங்குகள் (Banking & Financial Services), அடிப்படை கட்டுமானம் மற்றும் மூலப் பொருட்கள் (Infrastructure & Capital Goods), உள்நாடு சார்ந்த துறைகளில் (Domestic Cyclicals) முதலீடு செய்யலாம். ஐ.டி. சேவைகள் (IT Services), ஏற்றுமதி சார்ந்த துறைகளை (Export-oriented sectors) தவிரிப்பது நல்லது.
* தங்கத்திற்கு மாற்றாக, வெள்ளியில் முதலீடு செய்வது சிறப்பானதா? இல்லாதபட்சத்தில் வேறு எதில் முதலீடு செய்யலாம்?
வெள்ளியை, தங்கத்திற்கு மாற்றாக கருதமுடியாது. இப்போது வெள்ளியின் விலை ஏற்றம் பெற்றாலும், அதன் நிலைப்புத்தன்மை கொஞ்சம் கேள்விக்குறியாகவே உள்ளது. அதனால் முதலீட்டின் ஒரு பகுதியாக, வெள்ளியை வைத்து கொள்ளலாம். ஆனால் முழு பணத்தையும் அதில் முதலீடு செய்வது தவறு.
அதற்கு மாற்றாக, ரியல் எஸ்டேட் மியூச்சுவல் பண்டுகள் (REITs) மற்றும் கார்ப்பரேட் பாண்ட் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்யலாம். இவற்றில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்தை விட குறைந்த ஆபத்து மற்றும் நிலையான வருமானம் உண்டு.