செய்திகள்

ஏப்ரல் 2019 முதல் மோட்டார் வாகனங்களுக்கு உயர் பாதுகாப்பு கொண்ட நம்பர் பிளேட் கட்டாயம்

Published On 2018-12-07 17:05 IST   |   Update On 2018-12-07 17:05:00 IST
மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மத்திய மோட்டார் வாகனங்கள் சட்டத்தை திருத்தியிருக்கிறது. #vehicles #RoadSafety



மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் மத்திய மோட்டார் வாகன சட்டம் 1989இல் திருத்தங்களை மேற்கொண்டு இருக்கிறது. புதிய திருத்தங்களின் படி ஏப்ரல் 1, 2019ம் தேதியில் இருந்து விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களிலும், உயர்-பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் (நம்பர் பிளேட்) பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

வாகனங்களை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் சார்பில் உயர்-பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் வாகன விற்பனையாளர்களுக்கு வழங்கப்படும். இது வாகனத்தில் தனியே பொருத்தப்படும் மூன்றாவது பதிவு குறியீடாக இருக்கும். தற்போதைய வாகனங்களுக்கும் புது பாதுகாப்பு பதிவு எண் பலகைகளை பெற முடியும். 

எனினும், புதிய பதிவு எண் பலகைகளை பெறும் போது தற்சமயம் பயன்படுத்தப்படும் பதிவு எண் பலகைகளை திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும். உயர்-பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் காணாமல் போகும் அல்லது களவாடப்படும் வாகனங்களை டிராக் செய்து கண்டறிய பயன்படுத்தலாம்.



உயர்-பாதுகாப்பு பதிவு எண் பலகைகள் 15 ஆண்டு கியாரண்டியுடன் வழங்கப்படுகிறது. இதனிடையே உயர்-பாதுகாப்பு பதிவு எண் பலகை உடைந்து போகும் பட்சத்தில் பதிவு எண் பலகையை வழங்குவோர் அதனை மாற்றிக்கொடுக்க வேண்டும். அனைத்து உயர்-பாதுகாப்பு பதிவு எண் பலகைகளும் குரோமியம் சார்ந்த ஹோலோகிராமில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்டு இருக்கும்.

அசோக சக்கரம் பதிவு எண் பலகைகளின் இடதுபுறமாக பொறிக்கப்பட்டு இருக்கும். இதனுடன் பத்து இலக்கு பிரத்யேக பதிவு எண் லேசர் பிரான்டு செய்யப்பட்டு இடதுபுறமாக பொறிக்கப்பட்டு இருக்கும். பதிவு எண்களின் மேல் இந்தியா (India) என்ற வார்த்தை அச்சிடப்பட்டு இருக்கும்.

பதிவு எண்களைத் தவிர கூடுதலாக குரோமியம் ஹோலோகிராம் ஸ்டிக்கர் ஒன்று பதிவு எண் பலகையின் கீழ் இடதுபுறமாக அச்சிடப்பட்டு இருக்கும். இந்த ஸ்டிக்கரில் பதிவு எண், பதிவு செய்யும் அதிகாரி மற்றும் பிரத்யேக குறியீட்டு எண் மற்றும் என்ஜின் சேசிஸ் எண் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கும். #vehicles #RoadSafety
Tags:    

Similar News