செய்திகள்
துரைமுருகன்

தேர்தல் நேரத்தில் அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரி சோதனை நடத்துகின்றனர் - துரைமுருகன்

Published On 2021-04-02 09:35 GMT   |   Update On 2021-04-02 09:35 GMT
காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அ.தி‌மு.கவினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ.18 லட்சம் சிக்கியதாக நானும் கேள்விப்பட்டேன் என தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

வேலூர்:

வேலூர் மாவட்டம் காட்பாடியில் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் இன்று நிருபர்களிடம் பேட்டியளித்தார்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை இல்லத்திலும் அவரது கணவர் சபரீசன் அலுவலகத்திலும் இன்று காலையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவதாக செய்தி வந்தது. தொலைக்காட்சியைப் பார்த்தும் தெரிந்துகொண்டேன்.

இதேபோல அண்ணாநகர் சட்டமன்ற உறுப்பினர் மகன் வீட்டிலும் இந்த சோதனை நடத்தப்படுவதாக தொலைக்காட்சி மூலம் தெரிந்து கொண்டேன்.

தேர்தல் நெருங்கும் நேரம் ஒவ்வொரு கட்சியினரும் மிக வேகமாக பணிகளை முடித்து வாக்குச்சாவடிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட நேரத்தில் திடீரென மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை இல்லத்தில் சோதனை நடத்துவது அரசியல் உள்நோக்கத்திற்காக நடத்தப்படுவதாக நான் அறிகிறேன்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படிப்பட்ட சோதனை நடத்துவதால் எங்கள் தலைவருடைய குடும்பம் கழகமும் அதிர்ச்சி அடைந்து விடுவார்கள் தேர்தலில் தளர்ச்சி அடைந்து விடுவார்கள் என்ற தவறாக மத்திய அரசு நினைக்கக்கூடாது.

மிசா காலத்தில் இது போன்ற ஒரு வருமான வரிசோதனை ராசாத்தி அம்மையார் வீட்டில் நடந்தது. அபோது தலைவர் கருணாநிதி வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டு உடன்பிறப்புகளுக்கு மடல் எழுதிக் கொண்டிருந்தார்.

சோதனைக்கு வந்திருந்தவர்களில் சிலர் அதிலும் சென்னைவாசிகள் உங்க பேரு கபாலியா இந்த வீட்டில் உங்களுக்கு என்ன வேலை என கேலியாக பேசினார்கள். அதை ஒரு காதில் வாங்கி மறு காதில் விட்டு விட்டு அஞ்சாமல் மடல் எழுதிக் கொண்டிருந்தார்.

மு.க.ஸ்டாலின் வாழைக்கு கன்று அல்ல. ஆழுக்கு விழுதாக இறங்கியவர். தந்தையைவிட இரும்பு நெஞ்சம் கொண்டவர்.அவரை பயமுறுத்தி விடலாம். சோதனை மூலம் கழகம் கலகலத்துப் போய்விடும் என நினைப்பதை விட அரசியல் அப்பாவித்தனம் எதுவும் இருக்க முடியாது.

எ.வ. வேலு வீடு மற்றும் சில இடங்களில் சோதனை நடந்தது. இந்த சோதனை பற்றிய பேச்சுக்கள் நிறைவடைவதற்கு முன்பாக செந்தாமரை இல்லத்தில் சோதனை நடத்துவதன் மூலம் எல்லா கட்சியினரும் நடுங்கி போய் விடுவார்கள் என நினைக்கிறார்கள்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகம் அல்ல. நியாயமற்ற அரசியல். தி.மு.க. பொதுச் செயலாளர் என்ற முறையில் இதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

இதுபோன்ற பூச்சாண்டி வேலைக்கெல்லாம் தி.மு.க. பயப்படாது.

சோதனைகள் வழக்கு தண்டனை போன்றவற்றிற்கு பயபட்டிருந்தால் தி.மு.க. என்றோ செத்துப் போயிருக்கும். அந்த பிணத்தின் மீது புல் முளைத்திருக்கும். இது போன்ற சிந்தனைகள் எங்கள் கட்சியினருக்கு மேலும் உறுதியையும் சிந்தனையும் தரும்.

மு.க.ஸ்டாலின் அவரது மகள் செந்தாமரை மீது அபரீத அன்பு வைத்திருக்கிறார். அந்த குழந்தையை துன்புறுத்தினால் தலைவர் கலகலத்துப் போய் விடுவார் என மத்திய சர்க்கார் நினைக்கிறது.


ஒரு கனம் மகளைப் பற்றி நினைத்தாலும் மறுகணம் மக்களைப் பற்றி சிந்தித்து வீறுகொண்டு எழுவார் எங்கள் தலைவர். அப்படிப்பட்ட வீரசிங்கம் எங்கள் தலைவர். மத்திய அரசு இத்தகைய போக்கை கடைபிடிக்கக் கூடாது. இது அரசியலுக்கு உகந்தது அல்ல.

காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அ.தி‌மு.க வினர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த பணம் ரூ.18 லட்சம் சிக்கியதாக நானும் கேள்விப்பட்டேன்.

மற்ற இடங்களில் நடைபெறும் சோதனை கண்துடைப்புக்காக நடத்தப்படுகிறது. எங்கள் தரப்பில் செய்யப்படும் சோதனை மூலம் எங்களை பயமுறுத்த நினைக்கிறார்கள். எப்படியாவது ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்று காலூன்றி விடலாம் என பா.ஜ.க. நினைக்கிறது.

ரஜினிக்கு பால்கே விருது பெற்றதற்காக அவருக்கு தொலைபேசியில் வாழ்த்துக்களை தெரிவித்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News