செய்திகள்
சீமான்

50 ஆண்டுக்கும் மேலாக தமிழக மக்களை திராவிட கட்சிகள் ஏமாற்றி வருகின்றன- சீமான்

Published On 2021-03-29 07:32 GMT   |   Update On 2021-03-29 07:32 GMT
விவசாயத்தையும், கிராம கைவினை பொருட்கள் தயாரிப்பு தொழிலையும் அரசு வேலையாக அறிவித்து கிராம மக்களை அரசு ஊழியர்களாக பணியாற்ற செய்ய வேண்டும்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அண்ணாச்சிலை அருகில் நேற்று இரவு நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள நீர்நிலைகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள. ஏழை எளிய மக்கள் பலரும் அங்கு வசித்து வருகின்றனர். அவர்களிடம் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் பணம் வாங்கி கொண்டு பட்டா கொடுத்துள்ளனர்.மேலும் மின்சாரம், குடிநீர் இணைப்பு கொடுத்துள்ளனர். அவர்கள் மழைவெள்ள காலங்களில் பாதிக்கப்படுகின்றனர்.

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் நீர்நிலைகளை இனிமேல் ஆக்கிரமிக்க விட மாட்டோம். நமது பொருளாதாரம் கிராமங்களில் உள்ளது. அதனை மீட்டெடுக்க வேண்டும். வேலை வாய்ப்பு இல்லாததால் கிராம மக்கள் நகரங்களை நோக்கி வருகின்றனர். இதனால் நகரம் போக்குவரத்து நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதற்கு தீர்வு காண கிராமங்களில் தொழில் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

மக்கள் நகரங்களை நோக்கி வருவதை தடுக்க வேண்டும். கிராமங்களில் விவசாயம் மற்றும் கால்நடைவளர்ப்பு உள்ளிட்ட தொழில்வாய்ப்பை சரியாக பயன்படுத்தினால் கிராம மக்கள் பொருளாதாரம் மேம்படும்.

விவசாயத்தையும், கிராம கைவினை பொருட்கள் தயாரிப்பு தொழிலையும் அரசு வேலையாக அறிவித்து கிராம மக்களை அரசு ஊழியர்களாக பணியாற்ற செய்ய வேண்டும்.

தற்போது ஆடு, மாடு வளர்க்க ஆட்கள் தேவை என்று விளம்பரம் வருகிறது. இதை நாங்கள் சொன்னால் ஏற்றுக் கொள்ளாத மக்கள் கார்ப்பரேட் கம்பெனிகள் சொன்னால் கேட்கிறார்கள்.

நம் நாட்டில் எல்லா வளமும் உள்ளது. இங்கு கிடைக்கும் பொருட்களை சந்தை படுத்த வேண்டும். இதற்காக குறிஞ்சி அங்காடி, மருதம் அங்காடி உள்ளிட்ட அங்காடிகள் செயல்படுத்தப்படும். தென் மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகம் உள்ளது அதிலிருந்து கிடைக்கும் பதநீர், பனை ஓலை உள்ளிட்டவைகள் மூலம் மக்கள் வருமானம் ஈட்டமுடியும்.

தமிழக மக்களை 50ஆண்டுகளுக்கும் மேலாக திராவிட கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். தமிழகத்தை தலை சிறந்த மாநிலமாக மாற்றி காட்டுகிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News