செய்திகள்
சிடி ரவி

கருப்பு பணம் வைத்திருப்பவர்கள்தான் வருமானவரி சோதனைக்கு கவலைப்பட வேண்டும்- சிடி ரவி பேட்டி

Published On 2021-03-28 10:12 GMT   |   Update On 2021-03-28 10:12 GMT
அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது என்று பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சிடி ரவி கூறியுள்ளார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலையில் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்அமைச்சர் ஓ .பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றபோது 2 அல்லது 3 வாரத்தில் இந்த ஆட்சி கவிழ்ந்து விடும் என்று பெரும்பாலானோர் தெரிவித்தனர். ஆனால் அவர் கடந்த 4ஆண்டுஆட்சியை சிறப்பாக நடத்தியுள்ளார்.

தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமைந்துள்ளது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மிகவும் சிறப்பாக உள்ளது. அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் என்ன செய்ய போகிறோம் என்று முழுமையாக தெரிவித்துள்ளனர். ஆனால் தி.மு.க.வினர் அப்படி எதையும் சொல்லவில்லை.

2006 முதல் 2011 வரை தி.மு.க. ஆட்சி எப்படி நடைபெற்றது என்று மக்களுக்கு தெரியும். ஒரு நாளைக்கு 16 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டது. தமிழக மக்கள் மின்வெட்டை விரும்பவில்லை. ஒருவேளை தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மின் தடை மீண்டும் தொடரும்.

தி.மு.க. வாரிசு அரசியல் செய்து வருகிறது. தி.மு.க. என்றால் வாரிசு, பணம், கட்டப்பஞ்சாயத்து என்றுதான் அர்த்தம். தி.மு.க. என்பது கார்ப்பரேட் கம்பெனி.

தனது குடும்பத்தினர் வருமானத்தைப் பெருக்கிக் கொள்ளவே அவர்கள் ஆட்சிக்கு வர பார்க்கிறார்கள். அவர்கள் மக்கள் நலனை கருத்தில் கொள்ளவில்லை. அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் கூட்டணியில் உள்ள கட்சியினர் மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள்.

தமிழக மக்கள் கட்ட பஞ்சாயத்து, நில அபகரிப்பு போன்றவற்றை விரும்பவில்லை.

தமிழக வளர்ச்சிக்கு பாஜக உறுதுணையாக இருந்து வருகிறது. நாங்கள் 20 தொகுதியில் மட்டும் போட்டியிடவில்லை. எங்கள் கூட்டணியில் உள்ள கட்சியினர் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகிறார்கள். நாங்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறோம். அவர்களும் எங்களுக்கு ஒத்துழைப்பு அளிக்கிறார்கள். 234 தொகுதியிலும் நாங்கள்தான் வெற்றி பெறுவோம்.

வருமான வரித்துறை என்பது யாருடைய தலையிடும் இல்லாத சுதந்திரமான துறை. அவர்களுக்கு ஏதாவது தகவல் கிடைத்து இருக்கும். அதனால்தான் சோதனை செய்கிறார்கள்.

கருப்பு பணம் வைத்திருப்பவர்கள்தான் வருமான வரித்துறையை கண்டு கவலைப்பட வேண்டும். எ.வ.வேலுவிடம் கருப்பு பணம் இருக்கிறதா? நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். முதல் 3 இடத்தில் தமிழக மாணவர்கள் தான் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News