ஐ.பி.எல்.(IPL)
அதிமுக-வும் திமுக-வும் நேருக்குநேர் மோதும் தொகுதிகளில் ஒன்றான செங்கம் தொகுதி கண்ணோட்டம்.
அதிமுக சார்பில் எம்எஸ். நயினாக்கண்ணு, திமுக சார்பில் மு.பெ கிரி, ஐ.ஜே.கே. சார்பில் சுகன்ராஜ், நாம் தமிழர் சார்பில் வெண்ணிலா, தேமுதிக சார்பில் அன்பு ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
அதிமுக வேட்பாளர் எம்எஸ். நயினாக்கண்ணு சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 1,75,000
2. அசையும் சொத்து- ரூ. 9,09,331
3. அசையா சொத்து- ரூ. 40,05,000
திமுக வேட்பாளர் மு.பெ கிரி சொத்து மதிப்பு
1. கையிருப்பு- ரூ. 60,686
2. அசையும் சொத்து- ரூ. 58,08,685
3. அசையா சொத்து- ரூ. 25,00,000
செங்கம் சட்டமன்ற தொகுதி அதிகளவில் கிராம பகுதிகளை கொண்டது. சாத்தனூர் அணை இந்த தொகுதியின் அடையாளமாக உள்ளது.
1967 முதல் இன்று வரையில் செங்கம் தனி தொகுதியாக இருந்து வருகிறது. செங்கம் தொகுதி பொருத்தமட்டில் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த தொழில்கள், கால்நடை வளர்ப்பு உள்ளிட்ட தொழில்கள் சார்ந்த பகுதியாகும். செங்கம் தொகுதி மிகவும் பிற்படுத்தப்பட்ட தொகுதியாகவும் இருந்துவருகிறது. இந்த பகுதியில் தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பி மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
செங்கம் பகுதியில் உள்ள படித்த இளைஞர்கள் அண்டை மாநிலங்கள் மற்றும் அண்டை மாவட்டங்களுக்கு வேலைக்காக செல்லும் நிலை உள்ளது. மேலும் இந்த பகுதியிலிருந்து பெண்கள், ஆண்கள் கட்டுமான பணிகளுக்காக பெங்களூரு, திருப்பூர், சென்னை போன்ற பெருநகரங்களுக்கு சென்று பணிபுரிந்து வருகின்றனர்.
2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டதில் இருந்து செங்கம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 44 கிராம ஊராட்சிகளும், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 47 கிராம ஊராட்சிகளும், சாத்தனூர் அணையும் செங்கம் தொகுதியில் அடங்கியுள்ளன. செங்கம் தொகுதியில் ஆதிதிராவிடர்கள் அதிகளவில் உள்ளனர். முதலியார், நாயுடு, வன்னியர் உள்ளிட்ட மற்ற சமூகத்தினர் பரவலாக உள்ளனர்.
செங்கம் சட்டமன்ற தொகுதியில் 232 வாக்குச்சாவடி மையங்கள் இருந்தது. தற்போது கொரோனா தொற்று காரணமாக தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நிறைந்த வாக்குச்சாவடிகள் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது 59 வாக்குச்சாவடி மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு மொத்தம் 382 வாக்குச்சாவடிகளாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
செங்கம் சட்டமன்ற தொகுதியில் தி.மு.க. 5 முறையும், அ.தி.மு.க. 4 முறையும், காங்கிரஸ் 3 முறையும், தே.மு.தி.க., ஜனதாதளம், பொதுநலகட்சி தலா ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.
மொத்த வாக்காளர்கள் : 2,73,333
ஆண்கள் : 1,35,563
பெண்கள் : 1,37,760
மூன்றாம் பாலினம் : 10 பேர் உள்ளனர்.
செங்கத்தில் ரூ.12 கோடி மதிப்பில் நீதிமன்ற புதிய கட்டிடம், போக்குவரத்து பணிமனை கட்டப்பட்டுள்ளது. வேளாண்மை உதவி மையம் கட்டப்பட்டுவருகிறது. தண்டராம்பட்டு ஒன்றியத்தில் எடத்தனூர் பகுதியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் மேம்பால பணிகள் செய்து முடிக்கப்பட்டுள்ளது. கல்நாட்டுபுதூரில் தோட்டக்கலை துறை சார்பில் தோட்டக்கலை நாற்றாங்கல் பண்ணை சுமார் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.
செங்கம் ஒன்றியத்தில் செங்கம் நகர் பகுதியில் புதிய பஸ்நிலையம் முதல் போளூர் சாலை வரை ஒரே சாலையை மட்டுமே மக்கள் பயன்படுத்தி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இந்த சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே செங்கம் நகரை கடந்து செல்ல புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என்பது செங்கம் மக்களின் முதன்மையான கோரிக்கை ஆகும். செங்கம் தொகுதியில் நீர்வரத்து ஆதார கால்வாய்களை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். காய்கறி, பூ மற்றும் வாழை போன்றவைகளை பாதுகாக்க குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும். மேற்கண்டவை உள்பட பல கோரிக்கைகள் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
தேர்தல் வெற்றி
1951 ராமசாமிகவுண்டர் (பொது நலக்கட்சி)
1957 காரியகவுண்டர் (காங்கிரஸ்)
1962 சின்னராஜிகவுண்டர் (தி.மு.க.)
1967 சந்தானம் (தி.மு.க.)
1971 பாண்டுரங்கம் (தி.மு.க.)
1977 சாமிக்கண்ணு (அ.தி.மு.க.)
1980 சாமிக்கண்ணு (அ.தி.மு.க.)
1984 சாமிக்கண்ணு (அ.தி.மு.க.)
1989 சேது (ஜனதா கட்சி)
1991 வீரபாண்டியன் (அ.தி.மு.க.)
1996 நன்னன் (தி.மு.க.)
2001 போளூர் வரதன் (காங்கிரஸ்)
2006 போளூர் வரதன் (காங்கிரஸ்)
2011 சுரேஷ்குமார் (தே.மு.தி.க.)
2016 மு.பெ.கிரி (தி.மு.க.)
2016 தேர்தல்
மு.பெ.கிரி தி.மு.க.95,939
எம்.தினகரன்- அ.தி.மு.க.- 83,248
சி.முருகன்- பா.ம.க.- 15,114
கலையரசி- தே.மு.தி.க.- 8,007
எஸ்.தினகரன்- சுயே- 1,255
ஹெச்.தினகரன்- சுயே- 1,151
பாஸ்கரன்- பிஎஸ்பி- 948
நோட்டா1,403