ஐ.பி.எல்.(IPL)
பா.ஜனதா- காங்கிரஸ் நேரடியாக மோதும் ஊட்டி தொகுதி கண்ணோட்டம்
காங்கிரஸ் கட்சி இதுவரை 9 முறை வெற்றி பெற்றுள்ள நிலையில், பா.ஜனதா- காங்கிரஸ் கட்சிகள் இந்த முறை நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.
மலைகளின் அரசி என்றும், 60 சதவீதம் காடுகளை கொண்ட பகுதியாக நீலகிரி மாவட்டம் உள்ளது. இப்படி சிறப்பு வாய்ந்த மாவட்டத்தில்தான் உதக மண்டலம் சட்டமன்ற தொகுதி உள்ளது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் இந்த தொகுதியின் முக்கிய அடையாளங்களாக உள்ளது.
சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்கள் நிறைந்த தொகுதியாகவும் இது உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளுக்காக தங்கும் விடுதிகள், காட்டேஜூகள் இயங்கி வருகின்றன. சுற்றுலா தலங்களை நம்பி ஏராளமான வியாபாரிகள் வியாபாரம் நடத்தி வருகிறார்கள். பொக்காபுரம் மாரியம்மன் கோவில், ஊட்டி முருகன் கோவில் உள்பட பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களும், தேவாலயங்களும் உள்ளன.
இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 98,353 பேர், பெண் வாக்காளர்கள் 1,06,775 பேர், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் என மொத்தம் 2,05,138 வாக்காளர்கள் உள்ளனர்.
இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரஸ் 9 முறையும், அ.தி.மு.க, தி.மு.க தலா 2 முறையும், சுதந்திரா கட்சி ஒருமுறையும் வெற்றி பெற்றுள்ளது.
தொகுதியில் குந்தா, ஊட்டி தாலுகாக்களும், சோலூர், கேத்தி பேரூராட்சிகளும், ஊட்டி நகராட்சியும், கடநாடு, எப்பநாடு, கூக்கல், கக்குச்சி, தூனேரி, உல்லத்தி, நஞ்சநாடு தும்மனட்டி உள்பட பல்வேறு கிராமங்களும் நிறைந்து காணப்படுகிறது.
65 ஆயிரம் விவசாயிகளின் முக்கிய பொருளாதாரமாக தேயிலை விவசாயம் உள்ளது.
அதற்கு அடுத்தபடியாக பூண்டு, கேரட், உருளை, பீன்ஸ், காலிபிளவர் போன்ற காய்கறிகள் பயிரிடப்படுகின்றன. இவை அனைத்து தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி வெளி மாநிலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.
நீலகிரி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மருத்துவக் கல்லூரி ஊட்டி எச்.பி.எப் பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. சுற்றுலா பயணிகள் விரும்பி பயணம் செய்ய மலைரெயில் உள்ளது. சிறந்த சுற்றுலா தலமான ஊட்டியில் சுற்றுலா பயணி களுக்காக உயர்ந்த மலை சிகரமான தொட்ட பெட்டாவில் இருந்து ஊட்டி படகு இல்லம் வரை ரோப் கார் திட்டம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளை கடந்தும் இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களில் வெளிமாநிலங்கள், வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வாகனங்களில் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இடவசதி இல்லை.
இதை கருத்தில் கொண்டு மல்டி லெவல் பார்க்கிங் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், வாகனங்கள் நிறுத்துவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
மழை காலங்களில் கனமழை பெய்யும்போது சேரிங்கிராஸ், ரெயில்வே போலீஸ் நிலையம், கிரீன் பீல்டு ஆகிய பகுதிகளில் வெள்ளம் தேங்கி நிற்கிறது. குடியிருப்புகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துவிடுவதால் மக்கள் அவதி யடைகின்றனர். இதற்கு வடிகால் வசதிகள் செய்யப்படாததே காரணம். மேலும் சிறிய, சிறிய கால்வாய்களும் தூர்வாரப்படாமல் உள்ளது. எனவே இதனை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மலை உச்சியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் கொண்டு செல்ல முடியாததால் வினியோகம் பாதிக்கப்பட்டது. தொடர்ந்து நகராட்சி வாகனம் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு பார்சன்ஸ்வேலி 3-வது கூட்டுகுடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதனை நிறைவேற்றி தந்தால் பயனடைவோம் என மலை உச்சியில் வாழ்பவர்கள் கருதுகின்றனர்.
தேயிலை விவசாயத்தை நம்பி 65 ஆயிரம் பேர் உள்ளனர். தற்போது ஒரு கிலோ பச்சை தேயிலை ரூ.21-க்கு விற்பனையாகிறது. கடந்த ஆண்டு விலை அதிகரித்து பின்னர் படிப்படியாக குறைந்து வருகிறது. எனவே பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.30 முதல் ரூ.35 வரை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். மஞ்சூரில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஊட்டியில் அரசு என்ஜினீயரிங் கல்லூரி கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க ஐ.டிபார்க் அமைத்து தர வேண்டும். வனவிலங்குகள் தாக்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என இத்தொகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
அதிமுக கூட்டணியில் உதகமண்டலம் பா.ஜனதா கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவரை வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் ஏற்கனவே எம்எல்ஏ-வாக இருக்கும் ஆர். கணோஷ் களம் இறங்குகிறார்.
இதுவரை வெற்றி பெற்றவர்கள் விவரம்:
1957-லிங்கா கவுடர்(காங்கிரஸ்)
1962-கர்சண்(காங்கிரஸ்)
1967-போஜன்(சுதந்திர கட்சி)
1971-தேவராஜன்(தி.மு.க)
1977-கோபாலன்(அ.தி.மு.க)
1980-கல்லன்(காங்கிரஸ்)
1984-கல்லன்(காங்கிரஸ்)
1989-எச்.எம் ராசு(காங்கிரஸ்)
1991-எச்.எம்.ராசு(காங்கிரஸ்)
1996-குண்டன்(தி.மு.க)
2001-எச்.எம் ராசு(காங்கிரஸ்)
2006-கோபாலன்(காங்கிரஸ்)
2011-புத்திசந்திரன்(அ.தி.மு.க)
2016-கணேஷ்(காங்கிரஸ்)