ஐ.பி.எல்.(IPL)
கூடலூர் தொகுதி

கூடலூர் தொகுதி கண்ணோட்டம்

Published On 2021-03-12 11:06 IST   |   Update On 2021-03-12 11:06:00 IST
திமுக மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றுள்ள நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி கண்ணோட்டம்.
மேற்கு தொடர்ச்சி மலையின் மேற்குபுற சரிவிலும், கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் அமைந்துள்ளது கூடலூர் தொகுதி. இந்த தொகுதியை சுற்றிலும் ஏராளமான காடுகள் உள்ளன. இதனால் எப்போதும் இந்த தொகுதியில் இதமான கால நிலையே நிலவி வருகிறது. இந்த தொகுதியில் ஏராளமான சிறு, சிறு குன்றுகள் உள்ளன. அதனால் அதிகளவில் தேயிலை பயிரிடப்படுகிறது.



ஊசிமலை காட்சிமுனை, தவளை மலை காட்சிமுனை, தொங்கு பாலம், ஜினிபூல் கார்டன், தேவலா மற்றும் சேரம்பாடி சுரங்கங்கள், சேரங்கோடு சுவாமி மலை, முதுமலை வனவிலங்கு சரணாலயம், குசுமகிரி முருகன் கோவில், சந்தனமலை முருகன் கோவில், மசினகுடி, மாயார், மற்றும் நெலாக்கோட்டை ஆகியவை இந்த தொகுதியின் சிறப்பு வாய்ந்த இடங்களாக கருதப்படுகிறது. இதுதவிர 3 மாநில எல்லையில் அமைந்துள்ளது இந்த தொகுதியின் கூடுதல் சிறப்பு.



கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாக்களை உள்ளடக்கியதுதான் கூடலூர் தொகுதி. பொது தொகுதியாக இருந்த இந்த சட்டப்பேரவை தொகுதி கடந்த 2011-ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்கு பின்னர் தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. 


இந்த தொகுதியில் 92 ஆயிரத்து 108 ஆண் வாக்காளர்களும், 96 ஆயிரத்து 495 பெண் வாக்காளர்களும் என மொத்தம் 1 லட்சத்து 88 ஆயிரத்து 604 பேர் உள்ளனர்.



1967 முதல் தேர்தலை சந்தித்து வரும் இந்த தொகுதியில் இதுவரை நடந்த தேர்தல்களில் தி.மு.க 6 முறையும், அ.தி.மு.க 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும், சுதந்திரா கட்சி ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளது. 2006 முதல் நடந்த தேர்தலில் தொடர்ச்சியாக 3 முறை தி.மு.க.வே இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. தற்போதும் தி.மு.க.வை சேர்ந்த திராவிட மணி எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

கூடலூர், நெல்லியாளம் ஆகிய 2 நகராட்சிகளும், 3 பேரூராட்சிகளும், 5 ஊராட்சிகளும் இந்த தொகுதியில் கீழ் வருகிறது. இங்கு ஆதிவாசி மக்கள், தாயகம் திரும்பிய தமிழர்கள், இதர மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.



இந்த தொகுதி மக்களின் பிரதான தொழிலே விவசாயம்தான். இங்கு அதிகளவில் தேயிலை, காபி, வாழை, குறுமிளகு, பாக்கு, நெல், ஏலக்காய் அவரை, புடலங்காய், பாகற்காய், பஜ்ஜி மிளகாய் என அனைத்து வகையான காய்கறிகளும் விளையும் தொகுதியாக இது உள்ளது.

கேரளா மற்றும் கர்நாடக மாநில எல்லையில் இந்த சட்டப்பேரவை தொகுதி அமைந்துள்ளதால், இங்குள்ளவர்கள் மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு பக்கத்து மாநிலங்களுக்கு செல்கின்றனர்.

கோரிக்கைகள்

கூடலூர் தொகுதியில் வருவாய் அல்லது வனத்துறைக்கு என ஒதுக்கப்படாத நிலங்கள் சட்டப்பிரிவு 17-ன் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. இவ்வகை பிரிவு நிலத்தில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பிரிவு 17-ன் கீழ் உள்ள நிலத்தில் ஏராளமான தேயிலை தோட்டங்களும் உள்ளது. நில பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.



கூடலூரில் இருந்து கோவைக்கு செல்ல 7 மணி நேரம் ஆகிறது. இதனால் கூடலூர், மசினகுடி, சிறியூர் வழியாக சத்தியமங்கலம், கோவைக்கு செல்லும் சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விட வேண்டும் என கூறி வருகின்றனர். ஆனால் புலிகள் காப்பக வனப்பகுதி என்பதால் மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. எனவே இந்த சாலையை திறந்து விட வேண்டும் என்பதே மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக உள்ளது.

மருத்துவ வசதி என்பது இந்த தொகுதி மக்களுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. அவசர மற்றும் ஆபத்தான சமயங்களில் மருத்துவ சிகிச்சைக்காக கோவை அல்லது கர்நாடகா, கேரள போன்ற பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிக்கே செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே கூடலூர் அரசு ஆஸ்பத்திரியை தரம் உயர்த்தி தர வேண்டும் என கூறுகின்றனர். கர்நாடக மாநிலம் நஞ்சன்கூடு முதல் கேரள மாநிலம் நிலம்பூர் வரை கூடலூர் வழியாக ரெயில் பாதையை விரிவுப்படுத்த வேண்டும் எனவும் கூறி வருகிறார்கள்.

கூடலூர் பகுதியில் நேந்திரன், வாழை, நெல் மற்றும் காபி, குறுமிளகு, இஞ்சி, கிராம்பு, ஏலக்காய் உள்ளிட்ட பணப்பயிர்களை நியாயமான விலைக்கு விற்பதற்கு ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைக்க வேண்டும். 3 மாநிலங்களை இணைக்கும் கூடலூரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. எனவே இங்குள்ள சாலைகளை விரிவுபடுத்த வேண்டும்.

இந்த தொகுதியின் முக்கிய பிரச்சினையே வனவிலங்குகள் ஊருக்குள் வந்து பயிர்களை சேதம் செய்வது தான். பயிர்களை மட்டுமல்லாமல் மனிதர்களையும் தாக்கி வருகிறது. சில சமயங்களில் உயிரிழப்பு ஏற்படுகிறது. இதற்கு ஒரு நிரந்த தீர்வு காண வேண்டும் என்பதும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.





1967- நஞ்சன்(காங்கிரஸ்)
1971- கே.எச்.பொம்மன்(சுதந்திரா கட்சி)
1977- கே.ஹட்சி கவுடர்(தி.மு.க)
1980- கே.ஹட்சி கவுடர்(தி.மு.க)
1984- கே.ஹட்சி கவுடர்(அ.தி.மு.க)
1989- எம்.கே.ஹரீம்(காங்கிரஸ்)
1991- கே.ஆர்.ராசு(அ.தி.மு.க)
1996- பி.எம்.முபாரக்(தி.மு.க)
2001- மில்லர்(அ.தி.மு.க)
2006- கே.ராமச்சந்திரன் (தி.மு.க)
2011- திராவிடமணி (தி.மு.க)
2016 திராவிடமணி (தி.மு.க)

Similar News