செய்திகள்

நாங்குநேரி தொகுதியில் போட்டியிட நடிகர் கார்த்திக் நாளை மனுதாக்கல்

Published On 2016-04-28 05:05 GMT   |   Update On 2016-04-28 05:05 GMT
நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் நாங்குனேரி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். நாங்குநேரி தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்திற்கு சென்று நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
நெல்லை :

நடிகர் கார்த்திக் தலைமையிலான நாடாளும் மக்கள் கட்சி வருகிற சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. அல்லது தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட விரும்பியது. ஆனால் அ.தி.மு.க. மற்றும் தி.மு.க.வில் நாடாளும் மக்கள் கட்சிக்கு இடங்கள் ஒதுக்கப்படவில்லை.

இதனால் நடிகர் கார்த்திக், 6 சிறிய கட்சிகளை இணைத்து ‘‘விடியல் கூட்டணி” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தனித்து போட்டியிட முடிவு செய்தார். இந்த அணி தமிழகத்தில் சுமார் 60 தொகுதிகளில் தனித்து போட்டியிடப் போவதாகவும் அறிவிக்கப்பட்டது.

நாடாளும் மக்கள் கட்சி தலைவர் நடிகர் கார்த்திக் நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குனேரி சட்டசபை தொகுதியில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளும் மக்கள் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் மூர்த்தி கூறியதாவது:–

நாடாளும் மக்கள் கட்சி தலைவர் கார்த்திக் நாங்குனேரி சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக சென்னையில் இருந்து நெல்லைக்கு நாளை (29–ந் தேதி) வருகிறார்.

பின்பு முக்கிய நிர்வாகிகள், தொண்டர்களுடன் நாங்குநேரி தொகுதி தேர்தல் அலுவலகமான தாலுகா அலுவலகத்திற்கு சென்று வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

நாங்குனேரி தொகுதியில் நாடாளும் மக்கள் கட்சிக்கு அதிக ஆதரவு உள்ளது. இதனால் அங்கு நாங்கள் வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

வேட்புமனு தாக்கலுக்கான ஏற்பாட்டை நாடாளும் மக்கள் கட்சி நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். மேலும் விடியல் கூட்டணி சார்பாக போட்டியிடுபவர்களும் நாளை அந்தந்த தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Similar News