செய்திகள்

வருமானவரி சோதனை குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்த வேண்டும்- மு.க.ஸ்டாலின்

Published On 2018-07-18 11:04 IST   |   Update On 2018-07-18 11:04:00 IST
காண்ட்ராக்டர் வீடுகளில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனை குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்த வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
ஆலந்தூர்:

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்து இன்று காலை சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி, அவருடைய பங்குதாரர் வீடுகள், அலுவலகங்களில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டு அதில் 180 கோடி ரொக்கமும், 100 கிலோ தங்கமும் பறிமுதல் செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகளை பார்த்தேன். நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகவும், முதல்-அமைச்சராகவும் இருப்பவர் எடப்பாடி பழனிசாமி.

இதுவரை முதல்-அமைச்சரின் உறவினர்களுக்கு டெண்டர் கொடுத்ததாக வரலாறு இல்லை. இந்த செய்தி வெளிவந்த பிறகும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாய் திறக்காமல் அமைதியாக மவுனமாக இருக்கிறார். மவுனம் சம்மதத்திற்கு அறிகுறி.

வருமானவரி சோதனையின் விசாரணை ஒரு நம்பிக்கையோடு முழு சுதந்திரமாக நடைபெற வேண்டும். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதற்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வது சாலப்பொருந்தும்.

இந்த பிரச்சனையை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்க வேண்டும்.


முன்னாள் தலைமை செயலாளர் ராம்மோகன் ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் சேகர் ரெட்டி ஆகியோர் வீடுகளிலும் அலுவலகங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அந்த விசாரணையெல்லாம் என்ன ஆனது என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதைப் போல அல்லாமல் காண்ட்ராக்டர் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை நீர்த்து போகாமல் முழுமையாக விசாரணை நடைப்பெற வேண்டும்.

தி.மு.க. காலத்திலும் இப்படிப்பட்ட காண்ட்ராக்டர்கள் இருந்தார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்லி இருக்கிறார். தி.மு.க. காலத்தில் இப்படிப்பட்ட அக்கிரமங்கள் நடைபெறவில்லை.

தற்போது கொள்ளை அடித்துள்ளனர். வருமான வரிசோதனையில் முதல்- அமைச்சரின் சம்பந்தியே இதில் சம்பந்தப்பட்டு இருக்கிறாரே? இதற்கு அமைச்சர் ஜெயக்குமார் என்ன பதில் சொல்லப்போகிறார்.

நீட் தேர்வில் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு கூறியிருக்கிறது. இதற்கு காரணம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி., டி.கே.ரங்கராஜன் தான் இதை கூட தமிழக அரசு செய்யவில்லை.

இனிமேலும் நீட் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தமனமாக இருக்காமல் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்த இந்த நேரத்தில் முறையான வக்கீலை வைத்து வழக்கு நடத்த வேண்டும்.

தி.மு.க. சார்பில் ஓ.பன்னீர் செல்வம் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டப்படி இதற்கு உரிய நடவடிக்கையை மேற்கொள்வேன். இதில் அரசு அதிகாரிகள் யாரும் சம்பந்தப்பட்டு இருந்தாலும் அவர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #DMK #MKStalin
Tags:    

Similar News