செய்திகள்

தேர்தலை கண்டு அ.தி.மு.க. பயப்படவில்லை- அமைச்சர் செல்லூர் ராஜூ

Published On 2018-07-07 13:08 IST   |   Update On 2018-07-07 13:08:00 IST
அ.தி.மு.க. தேர்தலை கண்டு பயப்படும் இயக்கம் அல்ல என்றும் எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #ADMK #TNMinister #SellurRaju
மதுரை:

மதுரையில் இருந்து கோவை, ஓசூர், சேலம் உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களுக்கு புதிய பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இந்த பஸ்களின் தொடக்க விழா ஆரப்பாளையத்தில் இன்று நடைபெற்றது.

அமைச்சர் செல்லூர் ராஜூ நிகழ்ச்சியில் பங்கேற்று, புதிய பஸ்கள் இயக்கத்தை தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுமைக்கும் 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்க முடிவு செய்யப்பட்டு தற்போது 550 பஸ்கள் வாங்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்படுகிறது.

அதில் மதுரையில் இருந்து 17 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் விரைவாகவும், பாதுகாப்பாகவும் பயணம் செய்வதற்காக நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் புதிய பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வர உள்ளது எங்களுக்கு எல்லாம் பெருமையாகும்.

மத்தியில் ஆளும் பா.ஜனதா கட்சியினர் தாங்கள் தான், எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்தோம் என சொல்லலாம். அதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது.

ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை மதுரை தோப்பூரில் அமைய, மத்திய அரசுக்கு அ.தி.மு.க. கொடுத்த அழுத்தமே காரணம்.

சட்டமன்றம், பாராளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருகிறது.


இது தொடர்பாக அ.தி.மு.க.வின் நிலைப்பாட்டை கழக ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் தேர்தல் ஆணையத்தில் தெரியப்படுத்தி இருக்கின்றனர்.

தேர்தல் ஆணையம் நடத்தும் கூட்டத்தில், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரை, தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர் பங்கேற்று கருத்துக்களை தெரிவிப்பார்கள்.

என்னை பொறுத்தவரை அ.தி.மு.க. தேர்தலை கண்டு பயப்படும் இயக்கம் அல்ல. எப்போது தேர்தல் வந்தாலும் சந்திக்க தயார்.

ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு முழுமையாக 5 ஆண்டுகள் ஆட்சி செய்ய வேண்டும். அப்படி பார்த்தால் அ.தி.மு.க. ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் தான் ஆகிறது. இடையில் தேர்தல் நடத்தப்பட்டால் மக்களின் வரிப்பணம் வீணாவதோடு, தேவையற்ற சிரமமும் ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார். #ADMK #TNMinister #SellurRaju
Tags:    

Similar News