செய்திகள்

தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி குறையவில்லை - மு.க.ஸ்டாலின் புகாருக்கு அரசு பதில்

Published On 2018-06-23 13:51 IST   |   Update On 2018-06-23 13:51:00 IST
தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி குறையவில்லை என்று மு.க.ஸ்டாலின் புகாருக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. #MKStalin

சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அரிசி உற்பத்தியில் தமிழ் நாடு அரசு முரண்பாடான தகவல்களை வழங்கியதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அரிசி உற்பத்தி தொடர்பாக, ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள புள்ளி விவரத்திற்கும், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்திற்கும் இடையில் பெருமளவு வேறுபாடு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

2013-14ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 71.15 லட்சம் டன்களாகவும், 2014-15ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 79.49 லட்சம் டன்கள் எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. ஆனால், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா, மாநிலங்கள் குறித்த புள்ளிவிவரங்கள் தொடர்பான மே 2018 கையேட்டு குறிப்பில், தமிழ்நாட்டில் 2013-14ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 53.49 லட்சம் டன்கள், 2014-15ம் ஆண்டில் அரிசி உற்பத்தி 57.27 லட்சம் டன்கள் என குறிப்பிட்டுள்ளது.

புதிய அணுகுமுறை அமலுக்கு வந்தபின்னர், 2013-14ம் ஆண்டிலிருந்து தான் மாநில அரசின் கணக்கீட்டுக்கும், மத்திய அரசின் கணக்கீட்டிற்கும், மாறுபாடு ஏற்பட்டு வருகிறது. இந்த மாறுபாடு கூட, 2013-14ம் ஆண்டிலும், 2014-15ம் ஆண்டிலும், மாநில கணக்கீட்டை விட மத்திய கணக்கீடு குறைந்திருந்தாலும், 2015-16ம் ஆண்டில் 6 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு மாநில அரசின் கணக்கீட்டை விட மத்திய அரசின் கணக்கீடு உயர்ந்து காணப்படுகிறது.


இருப்பினும், மாநில அரசின் கணக்கீடு அறிவியல் ரீதியாக மிகச் சரியான முறையில், 1950 முதல் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருவதால், மாநில அரசின் கணக்கீடு தான் சரியானதாகும் என்பதால், மாநில அரசின் அனைத்து வெளியீடுகளும் அதிகார பூர்வமான புள்ளிவிவரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மாநில அரசின் புள்ளி விபரப்படி, 2011-12 முதல் 2015-16ம் ஆண்டு முடிய உள்ள காலத்தில் அரிசி உற்பத்தியானது 71.15 லட்சம் டன்னிலிருந்து 79.49 லட்சம் டன் என்ற அளவிலேயே உள்ளது. 2012-13ம் ஆண்டில் நிலவிய கடும் வறட்சியின் காரணமாக, அரிசி உற்பத்தி 40.50 லட்சம் டன்னாக குறைந்தது.

அரிசி மகசூலைப் பொறுத்தவரை புள்ளியியல் துறை, வருவாய்த் துறை மற்றும் வேளாண்மைத் துறை அலுவலர்கள் மற்றும் மத்திய அரசின் தேசிய மாதிரி ஆய்வு நிறுவன அலுவலர்கள் முன்னிலையில் நடத்தப்படுவதால், மாநில அரசு அளிக்கும் புள்ளி விபரமே உண்மைத்தன்மை கொண்டது.

மத்திய வேளாண் துறையின் புள்ளிவிபர அடிப்படையில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், பல்வேறு காரணிகளை கணக்கில் கொண்டு புள்ளிவிபரங்களை சீரமைத்து கணிக்கப்படுவதால், இவ்விரண்டு புள்ளி விபரங்களையும் ஒப்பிடுவது சரியான அணுகுமுறையல்ல.

எனவே, மாநில அரசினால் அரிசி உற்பத்தி தொடர்பாக வெளியிடப்பட்ட தகவல்கள் அனைத்தும் விரிவான முறையில் அறிவியல் ரீதியாக நடத்தப்பட்ட பயிர் அறுவடை பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் எய்தப்பட்ட உண்மைத் தகவல்களாகும்.

செய்தித்தாள்களிலும், எதிர்க்கட்சித் தலைவரின் அறிக்கையிலும் குறிப்பிட்டது போல, அதிக அளவிலான உற்பத்தியை காண்பித்து மக்களை திசை திருப்ப வேண்டிய அவசியம் தமிழ்நாடு அரசுக்கு இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MKStalin

Tags:    

Similar News