செய்திகள்

கருப்புச் சட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்

Published On 2018-05-29 09:53 IST   |   Update On 2018-05-29 09:53:00 IST
தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இன்று கருப்புச் சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். #TNAssembly #DMKMLAs
சென்னை:

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டம் முடிந்த நிலையில், மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடத்தி அந்தந்த துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது.

இந்நிலையில் முதல் நாளான இன்று காலை சட்டமன்றக் கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கருப்புச்சட்டை அணிந்து அவைக்கு வந்தனர். தூத்துக்குடி போராட்டத்தின்போது போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்புச் சட்டை அணிந்துள்ளனர்.



வழக்கம்போல், இந்த சட்டசபை கூட்டத் தொடரிலும் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை கிளப்ப வியூகம் வகுத்துள்ளன. குறிப்பாக, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, நேரமில்லா நேரத்தில் (ஜீரோ அவர்) கேள்வி எழுப்ப பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த கூட்டத் தொடர் ஜூலை 9-ந் தேதி வரை மொத்தம் 23 நாட்கள் நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு நாளும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அதன்பின்னர் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது.  #TNAssembly #DMKMLAs
Tags:    

Similar News