செய்திகள்

கர்நாடகாவில் ஏற்பட்டு உள்ள ஆட்சி நீடிக்காது- இல.கணேசன்

Published On 2018-05-23 04:00 GMT   |   Update On 2018-05-23 04:00 GMT
கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி நிலைக்காது எனவும் தானாகவே கவிழ்ந்து விடும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. தெரிவித்துள்ளார். #Karnataka #BJP #LaGanesan
பழனி:

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசன் எம்.பி. பழனி வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் பிரதமர் மோடியின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். பாரதிய ஜனதாவின் 4 ஆண்டுகால ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகள், பெரிய அளவிலான பயங்கரவாத மற்றும் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறவில்லை.

பாரதிய ஜனதா கட்சியின் 4 ஆண்டுகால சாதனைகளை விளக்க பிரதமர் தமிழக கிராமங்களை நோக்கி வர உள்ளார். நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சி சுருங்கி வருகிறது. கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள ஆட்சி நிலைக்காது. தானாகவே கவிழ்ந்து விடும்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் கசிவுகள் சரிசெய்யப்பட வேண்டும். அனைத்து விதமான முன்னோடி திட்டங்களையும் எதிர்த்து போராடி வரும் வைகோ போன்றோர் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதால் போராட்டம் நீர்த்துப்போக வாய்ப்புள்ளது. பெட்ரோல்- டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வந்தால் விலை பெருமளவு குறையும்.


தனியார் பள்ளிகளைப் போல் அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். அப்போது அரசு பள்ளிகளின் சேர்க்கை உயரும். தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி பலமடைந்து வருகிறது.

கோவில்களில் உள்ள சிலைகளை தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். வருமானத்தை அதிகரிக்க கோவில் சொத்துக்களான கடைகள் போன்றவற்றிற்கு நியாயமான வாடகைகளை நிர்ணயித்து வசூலிக்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள இந்திய சிலைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார். #Karnataka #BJP #LaGanesan
Tags:    

Similar News