செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பு - மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்

Published On 2018-05-22 14:09 IST   |   Update On 2018-05-22 14:09:00 IST
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பால கிருஷ்ணன், ச.ம.க. தலைவர் சரத்குமார் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் போராடுகிற மக்களின் கோரிக்கையை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு மாறாக, ஆலை முதலாளியின் விருப்பத்தை நிறைவேற்றுகிற வகையில் போராடியவர்களை காவல் துறையினர் பெண்கள், குழந்தைகள் அனைவரின் மீதும் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, ஓட, ஓட விரட்டியடித்துள்ளனர்.

கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியதோடு மட்டுமல்லாமல், துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர். இதில் ஒருவர் பலியாகி உள்ளார். பலர் படுகாயமுற்றுள்ளனர். இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையாக கண்டிக்கிறது.

அமைதியாக போராடுகிற மக்கள் மீது கொடூரமான துப்பாக்கிச் சூடு மற்றும் அடக்குமுறைகளை ஏவிவிடுவதை தமிழக மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். எனவே நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறது.

ச.ம.க. தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

ஜனநாயக ரீதியில் போராடும் மக்களிடம் வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி தடியடி, புகைக்குண்டு என அப்பகுதியை கலவரபூமியாக மாற்றியிருப்பது கண்ட னத்திற்குரியது. பல்லாயிரக்கணக்கில் திரளும் மக்கள் பல லட்சக்கணக்கில் திரள்வதற்கு முன்பாக அவர்களின் நியாயமான கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதற்கு தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டக்களத்தில் ஏற்பட்ட துப்பாக்கிசூடு சம்பவத்தால் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்த செய்தி வருத்தமளிக்கிறது. ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பிற்கான போராட்டத்தில் உயிரிழந்த அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டைரக்டர் கவுதமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

ஸ்டெர்லைட் மக்களை அழிக்கும் எமன். தூத்துக்குடியில் நீர், நிலம், காற்று அனைத்தும் பாழாகியுள்ளது. தமிழக அரசு தூத்துக்குடி மக்களின் எழுச்சிக்கு மதிப்பளிக்க வேண்டும். அடித்து ஒடுக்க முற்பட்டால் நிலைமை விபரீதமாகும்.

மக்கள் புரட்சியாக போராட்டம் மாறுவதற்குள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். தூத்துக்குடி மக்களின் போராட்டம் வெல்லட்டும். மக்கள் வாழும் நகரமாக தூத்துக்குடி நிலைக்கட்டும்.
Tags:    

Similar News