செய்திகள்

அதிமுக ஆட்சியில் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் - மு.க.ஸ்டாலின்

Published On 2018-05-21 10:17 IST   |   Update On 2018-05-21 10:17:00 IST
அதிமுக ஆட்சியில் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #ADMK #Fishermen

சென்னை:

நாகப்பட்டினத்தில் தி.மு.க. மீனவர் அணி ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

கலைஞர் ஐந்து முறை முதல்-அமைச்சராக இருந்தபோது பல்வேறு பணிகளை செய்தார். இன்றைக்கு ஆட்சியில் இருப்பவர்களும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவும், 110 விதியை பயன்படுத்தி வெறும் அறிவிப்புகளை மட்டுமே வெளியிட்டுக் கொண்டு இருந்தார்களே தவிர, எதையும் நிறைவேற்றவில்லை. ஏற்கனவே, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., காமராசர், பக்தவச்சலம் என பல முதல்-அமைச்சர்கள் இருந்த நேரத்தில் 110 விதியை எதற்காக பயன்படுத்துவார்கள் என்றால், ஒரு பொது அவசர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளை அறிவிப்பார்கள். 

உதாரணமாக, அவை நடந்து கொண்டிருக்கும் போது ரெயில் விபத்து நடந்தால், தீவிபத்து நடந்து பலர் இறந்து விட்டால், அதுபோன்றவற்றை அறிவிக்க 110 விதியை பயன்படுத்துவது வழக்கம். ஆனால், மறைந்த ஜெயலலிதா ஆட்சி நடத்தியபோது செய்ய முடியாத, செய்யாத திட்டங்களை 110 விதியில் அறிவித்தார். அதையே இப்போதுள்ள அரசும் செய்கிறது.

2006-ல் ஆட்சிக்கு வந்த கலைஞர் ஏறக்குறைய 30 ஆயிரம் சுனாமி வீடுகளை கட்டிக் கொடுத்தார்.

அதுமட்டுமின்றி, உலக வங்கியிலிருந்து நிதி பெற்றும் சுனாமி வீடுகளை கட்டிக் கொடுத்தார். சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை எல்லாம் சீரமைத்துக் கொடுத்தவர் கருணாநிதி.

ஆழ்கடல் மீன் பிடிப்பிற்குச் செல்லும் மீனவர்களுக்கு 57 கோடி ரூபாய் மதிப்பில் 20 ஆயிரம் “கம்பியில்லா தொலை தொடர்பு சாதனம்” அதாவது வாக்கி டாக்கி அளிக்க திட்டம் அறிவித்தார். “எல்காட்” மூலமே அத்திட்டத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டது. அத்திட்டத்தை நிறைவேற்ற “தொலை தொடர்பு கோபுரம்” அமைக்கும் பணியையும் முடுக்கி விட்டார். அதுவரை பி.எஸ்.என்.எல் கோபுரங்களை குத்தகை எடுக்கவும் கடிதம் எழுதி அனுமதி கேட்டார்.

ஆனால், அதிமுக ஆட்சி வந்ததும் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டார்கள். பிறகு மீன்வளத்துறையே அத்திட்டத்தை நிறைவேற்றும் என்று கூறினார்கள். ஆனால், இன்றைக்கு “வாக்கி டாக்கி” கொடுக்கும் திட்டத்தை முடக்கிப் போட்டு விட்டது அ.தி.மு.க. அரசு.

முதன் முதலில் 1991ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா “கச்சத்தீவை மீட்பேன்” என்று சுதந்திர தின கொடியை ஏற்றி வைத்து விட்டு சபதம் போட்டார். ஆனால் தி.மு.க. ஆட்சியில் கச்சத்தீவின் போராடிப் பெற்ற மீன்பிடி உரிமை, வலை காயப்போடும் உரிமை போன்றவற்றை பறி கொடுத்தது அதிமுக அரசு.

இன்றுவரை அதிமுக அரசு கச்சத்தீவு மீட்பு பற்றி வாயே திறக்கவில்லை. மீனவர்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட போதும் அதிமுக அரசு ஆட்சியில் இருந்தது. மீனவர்கள் வர்தா புயலால் பாதிக்கப்படும் போதும் அதிமுக அரசுதான்.

சென்னை மட்டுமின்றி, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட மீனவர்களும் பாதிக்கப்பட்டார்கள்.

அந்த புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மீனவர்களுக்கும் நிவாரண பணிகள் மேற்கொள்ள 22 ஆயிரத்து 573 கோடி ரூபாயை மத்திய பா.ஜ.க. அரசிடம் கேட்டது. ஆனால், அவர்கள் கொடுத்ததோ 264 கோடி ரூபாய் மட்டுமே.

புயலில் சேதமடைந்த படகுகளை சீரமைத்துக் கொடுக்கவில்லை. அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற எந்த நடவடிக் கையும் எடுக்கவில்லை.

அது போல் 29.11.2017 மற்றும் 30-ம் தேதிகளில் கன்னியாகுமரியை கொடூரமாக தாக்கிய ஒக்கி புயல் பாதிப்பிலிருந்து இன்னும் கூட அந்தப் பகுதி மீனவர்கள் மீளவில்லை.

ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை முதல்- அமைச்சர் உடனே சென்று பார்க்கவில்லை. காணாமல் போன மீனவர்கள் பற்றியும் அ.தி.மு.க. அரசிடம் கணக்கு இல்லை. மீட்க வேண்டிய மீனவர்கள் பற்றியும் அதிமுக அரசிடம் கணக்கு இல்லை. ஒகி புயலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கேரள அரசு 20 லட்சம் ரூபாய் கொடுத்தது. ஆனால், தமிழக அரசு 10 லட்சம் ரூபாய் கொடுப்பதற்கே காலதாமதம் செய்தது. பிறகு நான் உள்பட எதிர்கட்சிகள் எல்லாம் வலியுறுத்திய பிறகு 20 லட்சம் ரூபாய் என்று அறிவித்தார்கள்.

அது கூட இன்னும் முறைப்படி ஒகி புயலில் காணாமல் போன அனைவருக்கும் வழங்கப்படவில்லை.


ஒகி புயலில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை அ.தி.மு.க. அரசால் காப்பாற்ற முடிய வில்லை.

அது மட்டுமல்ல 19.12.2017 அன்று பிரதமருக்கு ஒரு கடிதம் எழுதி ஒகி புயலுக்கு உடனடி நிவாரணப் பணிகளுக்காக 747 கோடி ரூபாயும், நீண்ட கால நிவாரணப் பணிகளுக்காக 13,520 கோடி ரூபாயும் நிதி கேட்டார் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால் அடுத்து வந்த ஆளுநர் உரையில் உடனடி நிவாரணத்திற்கு 401 கோடி ரூபாய் போதும் என்று கூறப்பட்டது. நீண்ட கால நிவாரணப் பணிகளுக்கு 4854 கோடி ரூபாய் போதும் என்று கூறப்பட்டது.

ஆனால் எந்த பணத்தையும் மத்திய பா.ஜ.க. அரசு மீனவர்களுக்காக கொடுக்க முன் வரவில்லை. 27.2.2016 அன்று ஆழ்கடல் மீன் பிடிப்புக்குச் செல்லும் மீனவர்களுக்கு “ஆபத்து கால எச்சரிக்கை தகவல் பரப்பும் கருவி” வழங்கப்படும் என்று அதிமுக அரசு அறிவித்தது.

அதுவும் 30 ஆயிரம் கருவிகள் வழங்கப்போகிறோம் என்று அறிவித்தார்கள். அந்த வகையில் 1600 கருவிகளை மட்டும் வாங்கி பெயரளவுக்கு கொடுத்து விட்டு அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள். ஆபத்து கால எச்சரிக்கை கருவியை வழங்கியிருந்தால் கூட ஒகி புயல் உயிரிழப்பை தடுத்திருக்க முடியும் அல்லது ஒகி புயல் பற்றி முன் கூட்டியே வெளிவந்த வானிலை எச்சரிக்கை படி முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் கூட காப்பாற்றியிருக்க முடியும்.

ஆனால் எதையும் செய்யாமல் அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருவதால் மீனவர் நலன்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.

இன்றைக்கு மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதிக்கும் மீன் பிடிக்க செல்ல முடியவில்லை. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கும் செல்ல முடியவில்லை அதற்கு மீனவர்களிடம் படகுகளும் இல்லை. ஆபத்தை முன் கூட்டியே எச்சரிக்கும் கருவிகளும் இல்லை. உள்ளூரிலும் மீன் பிடிக்க “மீன்பிடி துறைமுகங்கள்” மேம்படுத்தவோ, நவீனப்படுத்தவோ அதிமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீன்பிடி தடை காலத்தில் அவதிப்படும் மீனவ குடும்பங்களை பாதுகாக்க தற்போது கொடுக்கும் நிதியுதவி ரூ.5 ஆயிரத்தை ரூ.10 ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். ஆனால் மீன்பிடி தடை கால நிதியை அதிகரித்துக் கொடுக்கவும் அ.தி.மு.க. அரசுக்கு மனமில்லை.

இன்றைக்கு ராமேஸ்வரம் மீனவர்களாக இருந்தாலும் சரி, புதுக்கோட்டை பகுதி மீனவர்களாக இருந்தாலும் சரி, நாகபட்டினம் மீனவர்களாக இருந்தாலும் சரி, கடலூர் பகுதி மீனவர்களாக இருந்தாலும் சரி, ஏன் கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்ட மீனவர்களாக இருந்தாலும் சரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதி மீனவர்களாக இருந்தாலும் சரி, தமிழக மீனவர்கள் அனைவருக்குமே ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாதுகாப்பாக இருப்பது தி.மு.க மட்டுமே.

இவ்வாறு அவர் பேசினார். #MKStalin #ADMK #Fishermen

Tags:    

Similar News