செய்திகள்

பெரியார் சிலையை உடைப்பேன் என கூறும் எச்.ராஜாவை அரசு கைது செய்யாதது ஏன்?- திருமாவளவன் கேள்வி

Published On 2018-03-25 16:13 IST   |   Update On 2018-03-25 16:13:00 IST
பெரியார் சிலையை உடைப்பேன் என கூறிய எச்.ராஜாவை தமிழக அரசு ஏன் கைது செய்ய வில்லை என திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். #Thirumavalavan #periyarstatue #hraja

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் தேவாரம் அருகே பொட்டிபரத்தில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் உத்தமபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் தலைமை தாங்கி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசியதாவது:-

நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்.

ஆனால் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசு பச்சைக்கொடி காட்டுகிறது. இதனால் சுற்றுச்சூழல் பாதிக்கும் நிலை உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் செய்ய முடியாத சூழல் ஏற்படும். எனவே இந்த திட்டத்தை மத்திய மாநில அரசுகள் கைவிட வேண்டும்.

நியூட்ரினோ ஆய்வு மைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் வரும் 31-ந் தேதி ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நடைபயணம் மேற்கொள்கிறார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்.

பெரியாறு சிலையை உடைப்பேன் என கூறிய எச்.ராஜாவை தமிழக அரசு ஏன்? கைது செய்ய வில்லை. இதேபோன்ற கருத்தை நான் கூறி இருந்தால் வழக்கு போட்டிருப்பார்கள். தற்போது வேடிக்கை பார்க்கின்றனர்.


ராமராஜ்யம் என்ற பெயரில் மத வெறியை தூண்டும் சக்திகளுக்கு தமிழக மக்கள் இடம்பெறக் கூடாது. நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல. மத வெறியர்களுக்கு எதிரானவன். ஆனால் தமிழகத்தில் மத வெறியை தூண்டும் முயற்சியில் பா.ஜ.க. ஈடுபட்டுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன்.

குரங்கணி தீ விபத்தில் 20 பேர் உயிரிழந்து விட்டனர். மேலும் பலர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காட்டு தீ பற்றி ஒரு வாரமாக எரிந்து வந்துள்ளது. இதனை தெரிந்தும் வனத்துறையினர் மலையேற்றத்துக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை.

இதற்கு தமிழக அரசு முழு பொறுப்பேற்க வேண்டும். மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடிமற்றும் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #tamilnews #Thirumavalavan #periyarstatue #hraja

Similar News