செய்திகள்

தேர்தல் நேரத்தில் தி.மு.க.வுடனான கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும்: திருமாவளவன்

Published On 2018-02-05 19:51 IST   |   Update On 2018-02-05 19:51:00 IST
அரியலூர் மக்கள் பிரச்சனைக்காக திமுக.வுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தேர்தல் நேரத்தில் திமுக.வுடன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும் என்று திருமாவளவன் கூறினார். #thirumavalavan #dmk #coalition
ஆர்.எஸ்.மாத்தூர்:

அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ்.மாத்தூர் அருகே குறிச்சிக்குளம் கிராமத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன்  நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நாளுக்கு நாள் ஆணவக்கொலைகள் அதிகரித்து கொண்டு வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆணவ கொலை தடுப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஜெயங்கொண்டத்தில் கலப்பு திருமணம் செய்துக் கொண்ட வீரத்தமிழன் மற்றும் ஜெகதீஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது ஆணவக்கொலையா? என போலீசார்  விசாரணை செய்ய வேண்டும். 

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நடைபெறவில்லை. ஜெயலலிதா பிறந்தநாளையொட்டியாவது 10 ஆண்டுகள் சிறை என்பதை 8 ஆண்டுகளாக குறைத்தும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 25 பேர் உள்ளிட்டவர்களை நன் நடத்தை விதிகளின் படி விடுதலை செய்ய வேண்டும்.

மின் வாரிய ஊழியர்கள், சத்துணவு அங்கன் வாடி ஊழியர்கள் கோரிக்கை நியாயமானது. அவர்கள் போராட்டத்தை தொடங்குவதற்கு முன்னதாக அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி திராவிட கழகம் சார்பில்  நடைபெறும் போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கலந்து கொள்ளும். 

மேலும் சி.பி.எஸ்.இ.யில் படித்த மாணவர்கள் கலந்து கொள்ளும் வகையில் நீட் தேர்வு இருப்பது ஒருதலைபட்சமானது. காவிரி நீர் பிரச்சனையில் தமிழகத்திற்குள்ள உரிமையை பெற்று கொள்ள தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க  வேண்டும். 
அரியலூர் மக்கள் பிரச்சனைக்காக திமுக.வுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். தேர்தல் நேரத்தில் திமுக.வுடன் கூட்டணி குறித்து  முடிவு செய்யப்படும் . 

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது  மாவட்ட செயலாளர் செல்வநம்பி , கருப்புசாமி, மகளிர் அணி திருவிழி திருமாறன், செல்வராஜ், செந்துறை ஒன்றிய செயலாளர் வீரவளவன், பாலசிங்கம் உள்பட பலர் உடனிருந்தனர். #tamilnews #thirumavalavan #dmk 

Similar News