செய்திகள்

அ.தி.மு.க.வுக்கு புதிய நாளேடு: ஜெயலலிதா பிறந்த நாளில் தொடக்கம்

Published On 2018-01-18 06:58 GMT   |   Update On 2018-01-18 06:58 GMT
அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடாக ‘நமது புரட்சித்தலைவி அம்மா’ பிப்ரவரி 24-ம் தேதி முதல் வெளிவரும் என தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை:

அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவை தொடர்ந்து நமது எம்.ஜி.ஆர். நாளிதழும், ஜெயா டி.வி.யும் தினகரன் கட்டுப்பாட்டில் உள்ளது.

எனவே எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். அணியினர் புதிதாக நாளிதழும், தொலைக்காட்சியும் தொடங்க திட்டமிட்டனர்.

அ.தி.மு.க. பேச்சாளரான ஜெய கோவிந்தன் நடத்தி வந்த நமது புரட்சித்தலைவி அம்மா என்ற நாளிதழை வாங்கி இருக்கிறார்கள். இந்த நாளேடு ஜெயலலிதா பிறந்த நாளான அடுத்த மாதம் (பிப்ரவரி) 24-ந்தேதி முதல் அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

இதுபற்றி ஜெயகோவிந்தனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

இந்த இதழை நமது புரட்சித்தலைவி அம்மா என்ற பெயரில் 2002-ம் ஆண்டு பதிவு செய்து நடத்தி வருகிறேன். இலவச பிரதிகளாகவே வழங்கி வந்தேன்.

அ.தி.மு.க.வுக்கு அதிகாரப்பூர்வ நாளேடு இல்லை என்றதும் எனது பத்திரிகையை எடுத்துக் கொள்ளும்படி கூறினேன். அதனால் முதல்-அமைச்சரும் அதை வாங்கும்படி நிர்வாகிகளிடத்தில் கூறினார். நான் பத்திரிகையை முறைப்படி ஒப்படைத்து விட்டேன்.

நிறுவனர்கள் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். என்ற பெயரோடு 24-ந்தேதி முதல் வெளிவர இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் எனது சொந்த ஊர். கோவிந்தன் என்பதுதான் எனது பெயர். அம்மா மீது கொண்ட பற்றால் ஜெயகோவிந்தன் என்று வைத்துக் கொண்டேன்.

முதல் முதலில் ‘செல்வி’ என்ற பெயரில் ஒரு இதழை தொடங்கினேன். அதை அம்மாவிடம் கொடுத்த போது நாளிதழ் தொடங்கி நடத்துவது சாதாரண வி‌ஷயமல்ல. உங்களுக்கு வேறு ஏதாவது உதவி வேண்டுமா? என்று பரிவுடன் கேட்டார்.

பின்னர் ஜெ.ஜெ. முரசு என்ற இதழை நடத்தினேன். ‘அம்மா’ என்ற பெயர் தொண்டர்களிடம் பிரபலம் ஆனதும் நமது புரட்சித்தலைவி அம்மா என்று தொடங்கினேன்.

அம்மா என்றால் அம்மா தான். பிள்ளைகளின் நிலைமையை அறிந்து உதவுபவர். ‘அம்மான்னா சும்மாவா’ என்று ஒரு சினிமா படம் எடுத்தேன். 1½ கோடியை இழந்தேன்.

எனது நிலைமையை அறிந்து அம்மா என்னை அழைத்து எனக்கு ரூ.50 லட்சம் கொடுக்கும்படி ஒரு வரிடம் கூறினார். ஆனால் அவர் கடைசி வரை எனக்கு ஒரு ரூபாய் கூட தராமல் ஏமாற்றி விட்டார்.

இப்போது அம்மாவின் ஆன்மா சும்மாவிடாது என்று ஒரு படம் தயாரிக்க இருக்கிறேன். அந்த படம் ஏப்ரல் 14-ந்தேதி வெளிவரும். அதில் சில காட்சிகளில் முதல்-அமைச் சர், துணை முதல்-அமைச்சராக இ.பி.எஸ். - ஓ.பி.எஸ்.சை இடம் பெற வைக்க ஆசைப்படுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய பத்திரிகைக்கான அலுவலகம் ஆழ்வார் பேட்டையில் அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல ‘அம்மா’ தொலைக்காட்சியும் 24-ந்தேதி தொடங்குகிறது. முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமி தொலைக்காட்சி தொடங்குவதற்கான உரிமம் வாங்கி வைத்திருந்தார்.

அதை அ.தி.மு.க. சார்பில் வாங்கி உள்ளனர். தொலைக்காட்சி அலுவலகம் நுங்கம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ளது. #tamilnews

Tags:    

Similar News