செய்திகள்

பா.ஜ.க.விற்கு சரியான பாடத்தை ஆர்.கே.நகர் மக்கள் கற்று கொடுத்துள்ளனர்: திருநாவுக்கரசர்

Published On 2017-12-26 12:19 IST   |   Update On 2017-12-26 12:19:00 IST
மதவாத பா.ஜ.க.விற்கு சரியான பாடத்தை ஆர்.கே. நகர் மக்கள் கற்றுக்கொடுத்துள்ளனர் என்று புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கூறினார்.

புதுக்கோட்டை:

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் புதுக்கோட்டையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதவாத பா.ஜ.க.விற்கு சரியான பாடத்தை ஆர்.கே. நகர் மக்கள் கற்று கொடுத்துள்ளனர். மேலும் மத்திய அரசிற்கு அடிமைகளாக இருக்கும் அ.தி.மு.க.விற்கும் சரியான பாடத்தை அளித்துள்ளனர். மத்திய அரசிற்கு கொத்தடிமைகளாக செயல்படும் தமிழக அரசை மக்கள் விரும்பவில்லை என்பதையே தேர்தல் முடிவு காட்டுகிறது.

அ.தி.மு.க. இரண்டு அணிகளாக பிரிந்து நின்ற போதிலும் அது தி.மு.க. கூட்டணிக்குத்தான் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாக்குகள் எங்கே போனது என்பதை கூட்டணி கட்சிகள் சுய பரிசோதனை செய்ய வேண்டும்.

ஆர்.கே.நகர் தேர்தல் தோல்விக்கு பணப்பட்டுவாடா ஒரு காரணம். மற்றொரு காரணம் குறித்து ஆய்வு செய்வதற்கு தி.மு.க. குழு அமைத்துள்ளது. அதே போன்று காங்கிரஸ் கட்சி சார்பிலும் மாநிலத் துணைத்தலைவர் தாமோதரன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு 4 நாட்களுக்குள் அறிக்கையை அளிக்கும். தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிவு ஜெயலலிதாவிற்கு பிறகு அ.தி.மு.க. தலைமை என்பது தினகரனுக்குத்தான் என்பதை அ.தி.மு.க. தொண்டர்களும் மக்களும் முடிவு செய்து விட்டார்கள் என்பதையே காட்டுகிறது.

இனி அ.தி.மு.க.வில் இருந்து பலர் விலகி தினகரன் அணிக்கு வரலாம். இதனால் ஆட்சி கவிழலாம். எத்தனை காலம் இந்த ஆட்சி இருக்கும் என்று தெரியாது.

காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ந்தேதி கன்னியாகுமரியிலிருந்து எனது தலைமையில் ரத யாத்திரை தொடங்கி அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல திட்டமிட்டுள்ளோம். ஒன்றரை மாதம் நடக்கும் ரத யாத்திரையில் மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியை பலப்படுத்த உள்ளோம்.

வரும் உள்ளாட்சி தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். கூட்டணியில் அதிக இடங்களை நிச்சயம் காங்கிரஸ் கட்சி கேட்கும். இறுதியில் கொடுக்கின்ற தொகுதிகளை பெற்றுக்கொள்வோம். ரஜினி ,கமல் மட்டுமல்ல அனைவரும் கட்சி தொடங்கலாம். ஆனால் அவர்கள் சீக்கிரம் கட்சி தொடங்கினால் நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News