செய்திகள்

காவிரி நதி நீர் ஆணையம் அமைக்கப்படும்: தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2017-09-22 09:58 IST   |   Update On 2017-09-22 09:59:00 IST
காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க பா.ஜ.க. ஆதரவாக உள்ளது என காவிரி மகா புஷ்கர விழாவில் பங்கேற்ற தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
மயிலாடுதுறை:

மயிலாடுதுறை துலாகட்டத்தில் காவிரி மகாபுஷ்கர விழா கடந்த 12-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் 10-ம் நாளான நேற்று இரவு தமிழக பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வருகை தந்து காவிரி நீரை தலையில் தெளித்து கொண்டு வழிபாடு செய்தார். இதனை தொடர்ந்து காவிரி கரையில் நடைபெற்ற மகாஆரத்தி வழிபாட்டில் கலந்து கொண்டு கையில் அகல் விளக்கை ஏந்தி காவிரி நதியை வழிபட்டார்.

அப்போது துலாகட்டத்தில் கூடியிருந்த பெண்கள் விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம் ஆகியவற்றை பாராயணம் செய்தனர். பின்னர் தமிழிசை சவுந்தரராஜன், காவிரி துலாகட்ட பகுதியில் உள்ள துண்டி விநாயகர், காவிரி தாய், ஆஞ்சநேயர் ஆகிய சுவாமிகளை வழிபட்டார். தொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளிடம் அருளாசி பெற்றார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நேற்று முன்தினம் காவிரி துலாகட்டத்தில் முதல்-அமைச்சர் புனிதநீராடி சென்றார். அதனை சிலர் விமர்சித்து இருப்பது வேடிக்கையாக உள்ளது. பா.ஜனதா கட்சிக்கு, காவிரி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்பது விருப்பமாக உள்ளது. காவிரி நதிநீர் ஆணையம் அமைக்க ஆதரவாக உள்ளோம். சுயஆட்சியை பற்றி பேசுபவர்கள், மற்றவர்களையும் மதிக்க வேண்டும். கர்நாடக அரசு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்துவிட எதிர்க்கிறது. இந்த பிரச்சனை தீர நதிநீர் இணைப்பு மட்டுமே நிரந்தர தீர்வாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் பா.ஜனதா கட்சி பொறுப்பாளர்கள், காவிரி மகாபுஷ்கர விழா குழுவினர் உடன் இருந்தனர்.

Similar News