செய்திகள்

குறைகளை மட்டுமே கூறுவதில் கவனமாக இருக்கிறார் ஸ்டாலின்: ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு

Published On 2017-09-07 12:40 IST   |   Update On 2017-09-07 12:40:00 IST
குறைகளை மட்டுமே கூறுவதில் கவனமாக இருக்கிறார் ஸ்டாலின் என துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டியுள்ளார்.
ஈரோடு:

ஈரோட்டில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசியதாவது:-

கழகம் கண்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். வெள்ளை மனம் கொண்டவராம் எவராலும் வெல்ல முடியாதவராக திகழ்ந்தார். அதேபோல்தான் ஜெயலலிதாவும் யாராலும் வெல்ல முடியாதவராக திகழ்ந்தார்.

இருவரும் திரைப்படத்தில் மட்டும் அல்ல நிஜ வாழ்க்கையில் எவராலும் தோற்கடிக்க முடியாத சக்திகளாக திகழ்ந்தார்கள். ஆனால் இங்கு (தமிழகத்தில்) ஒரு எதிர்க்கட்சி தலைவர் (மு.க.ஸ்டாலின்) இருக்கிறார். இந்த அரசை அம்மா வழியில் நடக்கும் அரசை மக்கள் விரும்பும் அரசை தொட்டதற்கெல்லாம் குறைகளை மட்டும் கூறி கொண்டே இருக்கிறார்.

எதிர்க்கட்சி தலைவர் என்றால் எதிரி கட்சியாக மட்டும் பார்க்க கூடாது குறைகளை மட்டும் கூறுவதை வழக்கமாக இருக்கக் கூடாது. தவறு நடந்தால் சுட்டிக்காட்ட வேண்டும். அதே சமயம் ஆட்சியில் நல்லது நடந்தால் அதை பாராட்டவும் வேண்டும். ஆனால் இங்கே இருக்கிற எதிர்க்கட்சி தலைவருக்கு அந்த நல்லெண்ணம் கிடையவே கிடையாது.

எம்.ஜி.ஆரின் ஆட்சியை பொற்கால ஆட்சியாக மாற்றிக் காட்டியவர் ஜெயலலிதா. அவரால் வளர்க்கப்பட்ட படை வீரர்களாக விசுவாச மிக்க தொண்டர்களாக இங்கே மேடையில் நாம் இருக்கிறோம். கோடிக் கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது அ.தி.மு.க. ஆட்சியையோ கட்சியையோ யாராலும் எவராலும் ஆட்டவோ... அசைக்கவோ... அழிக்கவோ முடியாது.

இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.

Similar News