செய்திகள்

போலீஸ் மானிய கோரிக்கை: எடப்பாடி பழனிசாமி - துரைமுருகன் நேருக்கு நேர் வாக்குவாதம்

Published On 2017-07-06 15:19 IST   |   Update On 2017-07-06 15:19:00 IST
சட்டசபையில் இன்று போலீஸ் உள்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துரைமுருகன் இடையே நேருக்கு நேர் வாக்குவாதம் நடந்தது.
சென்னை:

சட்டசபையில் இன்று போலீஸ் உள்துறைமானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்தது. அப்போது சட்டமன்ற தி.மு.க துணை தலைவர் துரைமுருகன் பேசியதாவது:-

உலகில் தோன்றிய மிகப்பழமையான இலாகா பொதுப்பணித்துறை. அடுத்து மிகப்பழமையான இலாகா காவல்துறை.

காவல்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது போலீஸ் உயர் அதிகாரிகளான டி.ஜி.பி, கமி‌ஷனர் ஆகியோர் சபையில் இருக்க வேண்டும். அது தான் மரபு. ஆனால் அவர்கள் யாரும் இங்கு இல்லை. அதனால் நான் அவர்கள் வரும் வரை பேசப்போவதில்லை.

(திடீர் என்று அவர் இருக்கையில் அமர்ந்தார்).

அமைச்சர் செங்கோட்டையன்:- டி.ஜி.பி, கமி‌ஷனர் ஆகியோர் சபைக்கு வருவதற்கு தயாராக இருக்கிறார்கள். உடனே சபைக்கு வருவார்கள். (அப்போது முடிப்பதற்குள் டி.ஜி.பி, கமி‌ஷனர் ஆகியோர் சபைக்கு வந்து அவர்களுக்குரிய இருக்கையில் அமர்ந்தனர்)

எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் நீண்ட அனுபவம் உள்ளவர். அவர் காவல் துறை மானிய கோரிக்கையில் பேசுவதால் மகிழ்ச்சி அடைந்தேன். அவர் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை சொல்ல வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

துரைமுருகன்:- 1969-ம் ஆண்டு போலீஸ் கமி‌ஷன் அமைத்தது தி.மு.க ஆட்சி. போலீசாரின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை தி.மு.க கொண்டு வந்தது. தி.மு.க ஆட்சியில் அமைக்கப்பட்ட போலீஸ் கமி‌ஷன் பரிந்துரைகளை நிறைவேற்றியது. சமீப காலமாக போலீஸ் உயர் அதிகாரிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றை நிரப்ப வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி:- சமீபத்தில் டி.ஜி.பி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். 6 உயர் அதிகாரிகள் பணியிடங்களில் 5 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

துரைமுருகன்:- கடந்த 6 வருடங்களாக போலீசாருக்கு பதக்கங்கள் வழங்கும் விழா நடைபெறவில்லை. சட்டம் ஒழுங்கு சிறப்பாக இல்லை. போலீசாரிடம் மிகுந்த மன அழுத்தம் காணப்படுகிறது. சேலம் டி.எஸ்.பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். தி.மு.க முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 5 வருடம் 4 மாதம் ஆகிறது. இதுவரை கொலையாளி கண்டுபிடிக்கப்படவில்லை.

( போலீஸ் அதிகாரி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றியும், ராமஜெயம் கொலை வழக்கு எவ்வாறு துப்பு துலக்கப்படுகிறது என்பது குறித்தும் முதல்-அமைச்சர் விளக்கம் அளித்தார். தமிழ்நாட்டில் அ.தி.மு.க , தி.மு.க ஆட்சியில் நடந்த கொலை, கொள்ளை பற்றிய புள்ளி விவரங்களையும் தெரிவித்தார்.)

துரைமுருகன்:- இது போன்ற புள்ளி விவரங்களை போலீஸ் அதிகாரிகள் கொடுக்கிறார்கள். அது எந்த அளவு உண்மையாக இருக்கும் என்று தெரியவில்லை.

எடப்பாடி பழனிசாமி:- நான் கூறிய புள்ளி விவரங்கள் அனைத்துக்கும் சரியான குறிப்புகள் இருக்கின்றன. உங்கள் ஆட்சி என்றாலும், எங்கள் ஆட்சி என்றாலும் குற்றங்கள் நடைபெறுவது இயல்புதான். ஆனால் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது எங்கள் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது.

துரைமுருகன்:- சிங்கப் பூரில் போலீஸ் ஒருதனி அமைப்பாக செயல்படுகிறது.

அது போன்று இங்கும் தனி அமைப்பாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீசார் சிறப்பாக செயல்பட வேண்டும் என்றால் அவர்களுக்கு தகுந்த ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். மத்தியில் அரசு அமல்படுத்தியுள்ள 7-வது சம்பள கமி‌ஷன் பரிந்துரையை காவல்துறையினருக்கு தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.

போலீசாருக்கும் மக்களுக்கு நல்ல உறவை ஏற்படுத்த வேண்டும். போலீசாரை கண்டவுடனேயே என்னவோ நடந்து விட்டதோ என்று பொதுமக்கள் அச்சப்படக்கூடாது.

எடப்பாடி பழனிசாமி:- நீங்கள் சொல்வது அந்தக் காலம். இப்போது அப்படி அல்ல. செல்போன் இருக்கிறது. ஒருவருக்கு ஒருவர் தொடர்பு கொண்டு என்ன என்று கேட்டுக் கொள்வார்கள். போலீசாருக்கு பதக்கம் அளிக்கும் விழா, சுதந்திர தினம் அல்லது குடியரசு தினத்தில்தான் நடைபெற வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது. இந்த ஆண்டு சுதந்திர தித்தன்று போலீசாருக்கு பதக்கம் வழங்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Similar News