செய்திகள்

அ.தி.மு.க., பா.ஜனதாவின் கைப்பாவை இல்லை: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

Published On 2017-05-30 12:58 IST   |   Update On 2017-05-30 12:58:00 IST
அ.தி.மு.க., பா.ஜனதாவின் கைப்பாவை இல்லை என தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆலந்தூர்:

தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சியின் கைப்பாவையாக செயல் பட்டு வருவதாக கூறி வருகிறார். எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் இவ்வாறு கூறுவது தவறானது.

மாநிலத்தில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு இதற்கு ஒத்துழைப்பு தருகிறது. அரசியல் உறவு என்பது வேறு. அரசு சார்ந்த உறவு என்பது வேறு.


மத்திய அரசின் 3 ஆண்டு நிறைவு வெற்றியே. சில எதிர்க்கட்சிகள் கூறுவது போல தோல்வி இல்லை. காரணம் இந்த 3 ஆண்டில் மத்திய அரசு மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை.

கருப்பு பண ஒழிப்புக்கு பின்பு பல மாநில தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்று உள்ளது.

மாட்டு இறைச்சிக்கு தடை, மாட்டு இறைச்சி சாப்பிடுவதற்கு தடை என்று சிலர் கூறுகின்றனர். மத்திய அரசு ஒரு சட்டத்தை இயற்றி உள்ளது. அது விலங்குகளுக்கு பாதுகாப்பு, மாட்டு இறைச்சி விற்பனை ஒழுங்குமுறை ஆகும். யாரையும் மாட்டு இறைச்சியை சாப்பிடக் கூடாது என்று கட்டாயப் படுத்தவில்லை, தடுக்க வில்லை, கெடுக்கவும் இல்லை.

நல்லமுறையில் ஒரு அரசு போய்க்கொண்டு இருக்கிறது. எதிர்க்கத் தெரியாத எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News