செய்திகள்

ஜனாதிபதி தேர்தல் வரை அ.தி.மு.க. ஆட்சியில் நீடிப்பது சந்தேகம் தான்: துரைமுருகன்

Published On 2017-05-23 15:15 IST   |   Update On 2017-05-23 15:15:00 IST
ஜனாதிபதி தேர்தல் வரும் வரை அ.தி.மு.க. ஆட்சியில் நீடிப்பது சந்தேகம் தான் என மதுரையில் துரைமுருகன் கூறியுள்ளார்.
மதுரை:

மதுரை மாநகர் மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்தும், நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தியும் மதுரையில் இன்று கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், தலைமை நிலைய முதன்மை செயலாளருமான துரைமுருகன், செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பள்ளி, கல்லூரி மாணவ -மாணவிகளிடம் கலந்துரையாடினர்.

பின்னர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தி.மு.க.வை விமர்சிக்கும் செல்லூர் ராஜூ, தெர்மாகோல் அமைச்சர். அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ரஜினி வருவதால் தி.மு.க.வுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

தமிழகத்தில் நடந்து வரும் அ.தி.மு.க. ஆட்சி, ஜனாதிபதி தேர்தல் வரும் வரை இருக்குமா? என்பது சந்தேகமே? இது எனது அனுபவ கருத்து. அ.தி.மு.க. என்பது ஒரு கம்பெனி. அங்கு முதல்வர் என்ற மானேஜர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.

தி.மு.க. தனது பலத்தை பயன்படுத்தி முடிந்தவரை மக்கள் நலப்பணிகளை செய்து வருகிறது. தமிழகத்தில் ஆட்சி நடக்கிறதா? என்பதே தெரியவில்லை. அதை பற்றி பேச சட்ட மன்ற கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்தி வருகிறோம்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆட்சி நடைபெறவில்லை. காட்சிதான் நடைபெறுகிறது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமரை சந்திப்பது மக்கள் நலனுக்காக அல்ல. அவ்வாறு இருந்திருந்தால் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கிடைத்திருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட செயலாளர் வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் கருத்தரங்கில் கலந்து கொண்டனர்.

Similar News