அ.தி.மு.க. ஆட்சி கவிழ்ந்து விரைவில் தேர்தல் வரும்: கீழடியில் விஜயகாந்த் பேட்டி
திருப்புவனம்:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
இதனை பார்வையிடுவதற்காக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதாவுடன் இன்று கீழடி வந்தார். அங்கு அவர் ஆய்வுப்பணிகளை பார்வையிட்டார்.
பின்னர் நிருபர்களுக்கு விஜயகாந்த் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அகழ்வாராய்ச்சி நடைபெறும் இந்த இடம் மதுரை அருகே உள்ளது. பாண்டிய ஆட்சிக்குட்பட்ட இந்த இடத்தில் அகழ்வாராய்ச்சி நடைபெறுவதை பார்க்க வந்துள்ளேன். விவசாயிகள் பாதிக்காத வகையில் கீழடியில் அகழ்வாராய்ச் சியை மேற்கொள்ள வேண்டும்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். இதனால் தே.மு.தி.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. மக்கள் பார்த்து யாரை வேண்டுமானாலும் தலைவராக தேர்ந்தெடுக்கலாம். ரஜினி அரசியலுக்கு வருவதை பலர் எதிர்க்கிறார்கள். அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.
அ.தி.மு.க.வின் இரு அணிகள் குறித்து பேச விருப்பமில்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்தவுடன் தே.மு.தி.க. வின் நிலை குறித்து அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி கலைந்து விரைவில் பொதுத்தேர்தல் வரும். தமிழக ஆட்சியாளர்கள் இன்னும் 4 ஆண்டுகள் எப்படி ஆட்சியை தக்க வைத்துக்கொள்வது என்று தான் பார்க்கிறார்கள். மக்கள் பிரச்சினையை பார்ப்பதில்லை.
குடிநீருக்காக மக்கள் அவதிப்படுவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் கேட்டால், ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படும் என்று கூறுகிறார். ஆனால் அவர்கள் எப்போதுதான் பிரச்சினையை தீர்ப்பார்கள் என்று தெரியவில்லை.
ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்கள் ஆட்சி செய்வது தமிழகத்தில்தான் நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.