புதுக்கோட்டை அருகே அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை
புதுக்கோட்டை:
சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக புகார்கள் வந்தன.
அதிகாரிகளின் கண்ணை மறைத்து முதல் கட்டமாக ஒரு ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் வரை கொடுக்கப்பட்டது. இது தவிர பரிசு பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன. இரண்டாவது கட்ட பணப்பட்டு வாடாவை தடுக்க பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். ஆனாலும் வாக்காளர்களுக்கு எந்தவித தடையும் இன்றி பணம் விநியோகிக்கப்பட்டது.
இதுகுறித்து அரசியல் கட்சிகளின் அடுக்கடுக்கான புகார்கள், ஆதாரங்களுடன் கூடிய வீடியோ பதிவுகள் ஆகியவற்றால் அதிர்ச்சி அடைந்த தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டது.
முன்னதாக பணப்பட்டு வாடாவை தடுக்கவும், இது வரை பணப்பட்டுவாடா எப்படி நடந்தது என்பதை அறியவும் கடந்த மாதம் (ஏப்ரல்) 7-ந்தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் இறங்கினர்.
இதில் தமிழக சுகாதார துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கருக்கு சொந்தமான சென்னை, புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள அவருக்கு சொந்தமான வீடுகள், கல்வி நிறுவனங்கள், குவாரிகள், நண்பர்கள், உறவினர்களின் வீடுகள், சகோதரர் கல்லூரி உள்பட 35 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச் சர் விஜயபாஸ்கர் வீட்டில் இருந்து ரூ.89 கோடி அளவில் பணப்பட்டுவாடா நடந்ததற்கான முக்கிய ஆவணங்களை வருமான வரித் துறையினர் கைப்பற்றினர்.
இவை தவிர சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதியில் அமைச்சர் விஜயபாஸ்கர் அறையிலும் நடத்திய சோதனையில் பணம் மற்றும் ஆவணங்கள் சிக்கியது.
இதன் தொடர்ச்சியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், அவரது மனைவி ரம்யா ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
அதேபோல் கடந்த 8-ந்தேதி திருச்சியில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கரின் தந்தை சின்னத்தம்பி, சகோதரர் உதயகுமார் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதற்கிடையே புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியில் அதிகாரிகள் கடந்த 11-ந்தேதி மீண்டும் சோதனை நடத்தினர்.
இந்த குவாரியில் அரசு அனுமதியை மீறி கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறதா? கனிமவளத்துறையின் விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு கற்கள் வெட்டப்படுகிறதா? முறைப்படி குவாரி இயங்குகிறதா? என சோதனை நடத்தினர்.
இந்த நிலையில் டெல்லியில் இருந்து 10 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு புதுக்கோட்டை வந்து தங்கினர். இதனால் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் சோதனை நடத்தப்படலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் சவுராஷ்டிரா தெருவில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டிற்கு சென்றனர். கடந்த மாதம் 7-ந்தேதி நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட நகைகள், ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டில் உள்ள ஒரு தனி அறையில் பூட்டி சீல் வைத்தனர். அதனை அகற்றுவதற்காக இன்று வருகை தந்ததாக கூறப்பட்டது.
அதன்படி அதிகாரிகள் சம்பந்தப்பட்ட அறையை திறந்து நகை மற்றும் ஆவணங்களை சரிபார்த்தனர். பின்னர் கணக்கில் வந்த நகை, ஆவணங்களை வீட்டில் இருந்தவர்களிடம் கொடுத்தனர். மற்ற ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர். சுமார் அரைமணி நேரத்தில் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறு கையில், கடந்த மாதம் நடத்தப்பட்ட சோதனையில் நகை மற்றும் ஆவணங்களை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்திருந்தனர். அதனை அகற்றுவதற்காகவே அதிகாரிகள் சென்றுள்ளனர், இது சோதனை அல்ல என்று தெரிவித்தார்.