செய்திகள்

திண்டுக்கல் சீனிவாசன்-ஜெயகுமாரை வெளியேற்றினால் பேச்சு சுமூகமாக நடக்கும்: மதுசூதனன் பேட்டி

Published On 2017-05-17 12:44 IST   |   Update On 2017-05-17 12:44:00 IST
திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார் ஆகியோரை வெளியேற்றினால்தான் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான பேச்சு வார்த்தை நடக்கும் என்று மதுசூதனன் கூறினார்.
ஆலந்தூர்:

அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணியின் அவைத்தலைவர் மதுசூதனன் சென்னை விமான நிலையத்தில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடக்கிறது. அம்மா இல்லாத ஆட்சி மைதானம் போல இருக்கிறது. அந்த அணியினர் பேச்சு வார்த்தைக்கு அழைத்து எங்களை காலி செய்ய நினைக்கிறார்கள். திண்டுக்கல் சீனிவாசன், டி.ஜெயக்குமார் ஆகியோரை வெளியேற்றினால்தான் இரு தரப்பினருக்கும் இடையே இணக்கமான பேச்சு வார்த்தை நடக்கும்.

திண்டுக்கல் தொகுதியில் 1972-ம் ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் எம்.ஜி.ஆர். வேட்பாளரை நிறுத்தி அமோக வெற்றி பெற்றார். அது போல ஓ.பன்னீர் செல்வம் மக்களின் செல்வாக்கை பெற்றவர். நாங்களும் மகத்துவமான வெற்றி பெறுவோம்.

நாங்கள் தர்மத்தின்படி நடக்கிறவர்கள். ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் கட்சியில் ஆதிக்கம் செலுத்துவதை யாரும் விரும்பவில்லை. அது நியாயமும் இல்லை.

ஓ.பன்னீர் செல்வத்தை முதல்வராக தேர்வு செய்தது ஜெயலலிதா செய்த தவறு என்று நாஞ்சில் சம்பத் கூறுகிறார். அவர் அ.தி.மு.க.காரர் கிடையாது.

மாற்று கட்சியில் இருந்து நாஞ்சில் சம்பத் வரும் போது அவருக்கு கொள்கைப் பரப்பு துணை செயலாளர் பதவியும், இன்னோவா காரும் வழங்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அந்த காரை கட்சியின் தலைமை அலுவலகத்தில் விட்டு விட்டார். சில நாட்கள் கழித்து சசிகலாவை சந்தித்து இன்னோவா காரையும், சூட்கேசையும் வாங்கிச் சென்று விட்டு எங்களுக்கு எதிராக பேசி வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News