செய்திகள்

சசிகலா, தினகரன் இல்லாமல் அ.தி.மு.க. செயல்படாது: நாஞ்சில் சம்பத் பேச்சு

Published On 2017-05-14 10:29 IST   |   Update On 2017-05-14 10:29:00 IST
சசிகலா, தினகரன் இல்லாமல் அ.தி.மு.க. செயல்படாது என்று தேவகோட்டையில் நாஞ்சில் சம்பத் பேசினார்.

தேவகோட்டை:

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில், டி.டி.வி. தினகரன் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொதுக்கூட்டம் நடந்தது. நகர இணைச் செயலாளர் முருகன் தலைமை தாங்கினார். கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி, கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத், நடிகர் குண்டு கல்யாணம் உள்ளிட்ட பலர் பேசினர்.

அம்மா முதல்வராக இருந்த போது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாக்களில் பங்கேற்றார். அவர் உடல்நிலை சரியில்லாததை வெளிக்காட்டாமல் உற்சாகத்துடன் பங்கேற்றார்.

தான் சோர்ந்து விட்டால் தொண்டர்களும் துவண்டு விடுவார்கள் என்று கருதி எப்போதும் உற்சாகமாக காணப்பட்டார்.

ஓ.பி.எஸ்.சுக்கு மருத்துவத்தை பற்றி என்ன விவரம் தெரியும்? அவருக்கு ஜெயலலிதாவின் சாவின் மர்மத்தை கேட்க என்ன அருகதை உள்ளது?

ஜெயலலிதா 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த போது, 74 தலைவர்கள் வந்து பார்த்தார்கள். அவ்வாறு இருக்கும் போது ஜெயலலிதா மரணம் எப்படி மர்மமாக இருக்கும்?


சசிகலா மற்றும் தினகரன் மீது புகார் சொல்லும் பன்னீர் செல்வத்திற்கு தண்டனை கொடுக்க பொது மக்களிடமும், இளைஞர்களிடமும் நீதி கேட்க வந்துள்ளேன்.

அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் எப்போது எந்த கட்சியில் இருப்பார் என்று யாருக்கும் தெரியாது. ஒவ்வொரு பக்கமும் காற்று அடிக்கும் போது அவர் ஒவ்வொரு கட்சிக்கும் சென்று விடுவார். இவர் அ.தி.மு.க.வை விமர்சிக்க என்ன அருகதை உள்ளது?

அ.தி.மு.க.வை காப்பாற்ற வந்தவர் தான் தினகரன். இவர்தான் நிதி அமைச்சர் என்று சொன்ன அமைச்சர்கள், இன்று ஏன் மவுனமாக இருக்கிறார்கள்?

ஓ.பி.எஸ். தமிழகத்தில் அனாதையாக திரியும் காலம் வெகு விரைவில் வர உள்ளது. தினகரன் மவுனமாக இருப்பது, தமிழகத்தில் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

திகாரில் இருந்து தினகரன் விடுதலையாகி வரும்போது ஒரு கோடி தமிழர்கள் அவரை வரவேற்பார்கள். நிலத்தை நிராகரித்து விட்டு தண்ணீர் செல்லாததைப் போல சசிகலா- தினகரன் இல்லாமல் கட்சி செயல்படாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Similar News