செய்திகள்

ஓ.பன்னீர்செல்வத்துக்கு தேனி எம்.பி. பார்த்திபன் ஆதரவு

Published On 2017-02-12 16:46 GMT   |   Update On 2017-02-12 16:47 GMT
முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு 11-வது எம்.பி.யாக, தேனி எம்.பி. பார்த்திபன் இன்று வந்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
சென்னை:

ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருக்கிறார். ஆனால், அவரை முன்மொழிந்த முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்த, கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது.

பெரும்பான்மையான எம்.எல்.ஏ.க்கள் சசிகலா வசம் உள்ளனர். ஆனால், முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அ.தி.மு.க நிர்வாகிகளும், தொண்டர்களும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். கட்சியின் முக்கிய பிரமுகர்கள், எம்.பி.க்கள் என ஓ.பன்னீர்செல்வத்துக்கு இன்றும் பலர் ஆதரவு அளித்துள்ளனர். மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்ட 10 எம்.பி.க்கள் தங்களது ஆதரவினை வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் தேனி தொகுதி எம்.பி.யான பார்த்திபன் இன்று மாலையில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செலவத்தை அவரது இல்லத்தில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இதனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிக்கும் எம்.பி.க்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

எம்.எல்.ஏ.க்கள் குறைந்த அளவை ஆதரவு அளித்துள்ள நிலையில், எம்.பி.க்கள் ஆதரவு அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுபற்றி முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, அவர்கள் அனைவரும் மனசாட்சிப்படி இணைந்து வருவதாக கூறினார்.

Similar News