செய்திகள்

வார்தா புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய குழு பார்வையிட்டனர்

Published On 2016-12-28 08:10 GMT   |   Update On 2016-12-28 08:10 GMT
வார்தா புயல் பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தி விட்டு பின்னர் சேத பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.
சென்னை:

வார்தா புயல் பாதிப்பு குறித்து முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துடன் மத்திய குழுவினர் ஆலோசனை நடத்தி விட்டு பின்னர் சேத பகுதிகளை நேரில் பார்வையிட்டனர்.

கடந்த 12-ந்தேதி சென்னையில் கரையை கடந்த வார்தா புயல் பலத்த காற்றுடன் கோரத்தாண்டவம் ஆடியது.

சென்னை திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியது. 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் கீழே விழுந்தன. 30 ஆயிரம் மின்கம்பங்கள், 600 டிரான்ஸ்பார்மர்கள், 70 ஆயிரம் வீடுகள், படகுகள், விவசாய நிலங்கள் கடும் சேதம் அடைந்தன. புயல் பாதிப்பில் 24 பேர் உயிர் இழந்தனர்.

முதல்-அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் கடந்த 19-ந்தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்து புயல் நிவாரண நிதியாக ரூ. 22,573 கோடி தேவை என்று வலியுறுத்தி இருந்தார்.

புயல் சேதங்களை மதிப்பீடு செய்ய மத்திய குழுவை அனுப்பும்படி கேட்டுக்கொண்டார்.

இதன்படி மத்திய குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர்.

குழுவில் இடம் பெற்ற அதிகாரிகள் விவரம் வருமாறு:-

1. பிரவீன் வசிஷ்டா (உள்துறை இணை செயலாளர்)

2. கே.மனோசரண் ( மத்திய வேளாண்துறை இயக்குனர்)

3. ஆர்.பி. கவுல் ( நிதித்துறை உதவி இயக் குனர்)

4. நாராயணன் (குடிநீர் மற்றும் சுகாதார துறை)

5. ரோஷினி ஆர்தூர் (மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை மூத்த மண்டல இயக்குனர்)

6. சுமித் குமார் (மத்திய மின்சார ஆணைய துணை இயக்குனர்)

7. டி.எஸ். அரவிந்த் (சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை சென்னை மண்டல அதிகாரி)
(மத்திய ஊரக வளர்ச்சி துறை துணை செயலாளர்)

9. ஆர். அழகேசன் (மத்திய நீர்வள ஆணையம் தென் மண்ல ஆறுகள் இயக்குனர்)

மத்திய குழுவினர் 9 பேரும் இன்று காலை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை சந்தித்து புயல் பாதிப்பு குறித்து விரிவான ஆலோசனை நடத்தினார்கள்.



அப்போது புயல் சேத விவரங்களை ஆராய்ந்து பார்த்து மதிப்பீடு செய்து மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்டும் வகையில் மத்திய அரசிடம் அறிக்கை அளிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார். அதை மத்திய குழுவினர் ஏற்றுக்கொண்டனர். அதன் பிறகு மாநில அதிகாரிகளுடனும் புயல் சேத விவரங்கள் பற்றி விவாதித்தனர். புயல் பாதிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும் மத்திய குழுவினர் பார்த்தனர்.

அதன்பிறகு காலை 11.45 மணிக்கு மத்திய குழுவினர் புயல் பாதித்த இடங்களை பார்வையிட புறப்பட்டுச் சென்றனர். முதலில் தியாகராயநகர் பனகல் பார்க், அரும்பாக்கம் அண்ணா ஆர்ச், திருமங்கலம் ஆகிய இடங்களில் புயலால் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டனர்.

பின்னர் மாநகராட்சி அலுவலகம் சென்றனர். அங்கு வைக்கப்பட்டுள்ள புயல் சேத விவர புகைப்படங்களை பார்வையிட்டனர். மாநகராட்சி கமி‌ஷனர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் சேத விவரங்களை விளக்கி கூறினார்கள்.

மாலையில் பல்லாவரம், வண்டலூர் பகுதியில் பார்வையிடுகிறார்கள். நாளை காலை 9 மணிக்கு ராயபுரம் தொடங்கி கள்ளுக்கடை மேடு, சின்னம்பேடு, சோழவரம், ஒரக்காடு உள்பட பல பகுதிகளையும் பார்வையிடுகிறார்கள்.

நாளை மாலை தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதனுடன் ஆலோசனை நடத்துகிறார்கள். அதன்பிறகு டெல்லி திரும்புகிறார்கள். புயல் பாதிப்பு குறித்து மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்கிறார்கள்.

Similar News