செய்திகள்

திருநாவுக்கரசர் காங்கிரஸ் தலைவரா? - அ.தி.மு.க. தலைவரா?: தமிழிசை சவுந்தரராஜன் தாக்கு

Published On 2016-12-26 14:56 IST   |   Update On 2016-12-26 14:56:00 IST
திருநாவுக்கரசர் காங்கிரஸ் கட்சிக்கு தலைவரா? அல்லது அ.தி.மு.க. தலைவரா? என்று சில நேரங்களில் சந்தேகம் எழுகிறது என தமிழிசை சவுந்தரராஜன் கூறி உள்ளார்.
ஆலந்தூர்:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனைத்து முயற்சிகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. இது தொடர்பாக வழக்காடு மன்றத்தில் தனது வாதத்தை எடுத்துரைத்து வருகிறது.

தி.மு.க., காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது ஜல்லிக்கட்டு நடப்பதற்கான நிரந்தர தீர்வு கொண்டு வரவில்லை. இப்போது தி.மு.க. போராட்டம் என்று சொன்ன உடனேயே காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நாங்களும் சேர்ந்து போராடுவோம் என்று கூறுகிறார். ஊழலில் சேர்ந்தவர்கள் இதிலும் சேர்வார்கள.

காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், தமிழத்தில் பா.ஜனதா புழக்கத்தில் இல்லாத கட்சி என்று கூறி இருக்கிறார். அவரைப் போல் மற்ற கட்சிக்கு மாறுகிற புழக்கம் இல்லாத கட்சி தான் எங்களுடையது. அவருடைய கட்சியை அவர் பார்க்கட்டும்.

காங்கிரஸ் கட்சிக்கு திருநாவுக்கரசர் தலைவராக இருப்பது துரதிருஷ்டவசமானது. அவர் சில நேரங்களில் காங்கிரஸ் தலைவரா? அல்லது அ.தி.மு.க. தலைவரா? என்ற சந்தேகம் எழுகிறது.

வார்தா புயல் சேதங்களை மத்திய அரசு செயற்கைகோள் புகைப்படத்தை வைத்து ஆராய்ந்து வருகிறது.

முதல்-அமைச்சர் பன்னீர் செல்வத்தை மாற்ற வேண்டும் என்று சில அமைச்சர்கள் கூறி இருப்பது அவர்களது உட்கட்சி பிரச்சினை.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News