குத்தாலம் அருகே தேர்தலில் சீட் கேட்டு அ.தி.மு.க. பிரமுகர் குடும்பத்துடன் போராட்டம்: தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் பகுதி கோமல் மேலத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது54). இவர் குத்தாலம் தெற்கு ஒன்றிய ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளராக உள்ளார். இவர் கடந்த 34 வருடங்களாக அ.தி.மு.க.வில் இருந்து வருகிறார்.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து கோமல் வார்டு பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வார்டை தனது மனைவி ஜெயந்திக்கு வழங்குமாறு பாலசுப்பிரமணியன் கட்சி நிர்வாகிகளிடம் கூறி உள்ளார். மேலும் அவர் அ.தி.மு.க. தலைமை தனது மனைவிக்கு சீட் ஒதுக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 5 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இதையறிந்த கட்சி நிர்வாகிகள் அவரை அழைத்து மேலிடம் உத்தரவு வருவதற்கு முன்பு இதுபோல் செய்யக்கூடாது என்று தடுத்து உள்ளனர்.
இந்நிலையில் முத்துக்குமார் என்பவரும் தனது மனைவிக்கு சீட் கேட்டுள்ளார். இதனால் அதிருப்தி அடைந்த பால சுப்பிரமணியன் தனது மனைவி ஜெயந்தி மற்றும் 3 பெண் குழந்தைகளுடன் கோமல் கடைத்தெருவிற்கு இன்று காலை வந்தார். அவர் மண்எண்ணை கேனுடன் வந்து தீக்குளிக்க முயன்றார்.
இதையறிந்த பாலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மண்எண்ணை கேனை கைப்பற்றினர்.
இதையடுத்து பாலசுப்பிரமணியன் தனது குடும்பத்தினர் மற்றும் கட்சி ஆதரவாளர்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டார்.தகவலறிந்து அங்கு வந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கலிதீர்த்தான் மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட்ட 100 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் இன்று பரபரப்பு ஏற்பட்டது.