செய்திகள்

போட்டி சட்டசபை கூட்டத்தை தி.மு.க. நடத்தியது தவறு: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

Published On 2016-08-21 15:27 IST   |   Update On 2016-08-21 15:27:00 IST
தமிழகத்தில்போட்டி சட்டசபை கூட்டத்தை தி.மு.க. நடத்தியுள்ளது அசிங்கமான வி‌ஷயம் என்று பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

விவசாயிகளின் போராட்டத்திற்கு பா.ஜனதா ஆதரவு குறித்து தமிழக பா.ஜனதா தலைமை தான் முடிவு எடுக்க வேண்டும். கர்நாடக அரசு தமிழகத்திற்கு தர வேண்டிய தண்ணீரை தர வேண்டும். விவசாயிகளின் போராட்டம் நியாயமானது. காவிரி, பாலாறு மற்றும் ஜல்லிக்கட்டு ஆகிய பிரச்சினைகளில் பா.ஜனதா இரட்டை நிலைப்பாடு எதுவும் எடுக்கவில்லை.

காவிரி, முல்லைபெரியாறு , பாலாறு ஆகிய பிரச்சினைகளில் தமிழகத்தின் உரிமை எந்தவிதத்திலும் பாதிப்படைய கூடாது என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது.

மற்றவர்கள் ஆயிரம் கருத்துக்கள் கூறலாம். அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அமைச்சரவையில் 75 அமைச்சர்கள் உள்ளனர். அவர்களில் ஒரு அமைச்சர் கூறும் கருத்தை வைத்து முடிவு செய்ய முடியாது.ஒட்டு மொத்த அமைச்சர்களும் ஜல்லிகட்டு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நிச்சயமாக வரும் காலத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

தமிழகத்தில் கேலிகூத்தான சட்டசபை நடந்து வருகிறது. சட்டசபையில் தமிழகத்தின் அனைத்து பிரச்சினைகளையும் கலந்து ஆலோசித்து அதற்கு தீர்வு காண வேண்டும். போட்டி சட்டசபை கூட்டத்தை தி.மு.க. நடத்தியுள்ளது அசிங்கமான வி‌ஷயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News